விடுமுறை முடிந்தது.. மொத்தமாக சென்னை கிளம்பிய மக்கள்.. செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: விடுமுறை தினத்திற்காக சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. செங்கல்பட்டு சுங்கசாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.
தொழில் நிமித்தமாகவும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கும் சென்னையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. இதனால், வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.

அதிலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் எல்லாம் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். அந்த வகையில், சுபமுகூர்த்த தினம் மற்றும் விடுமுறை தினங்கள் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்வதை காண முடிந்தது.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளையும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்தது. விடுமுறை முடிந்து நாளை அலுவலக தினம் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். சொந்த கார்கள் வைத்திருப்பவர்கள் கார்களிலும் கார்கள் இல்லாத பயணிகள், பேருந்துகள் மற்றும் ரயிலிலும் சென்னை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி கார்கள் அணி அணியாய் வந்து கொண்டு இருக்கின்றன. செங்கல்பட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டணம் எடுத்துக் கொள்ள சில வினாடிகள் தாமதம் ஆனால், கூட வரிசையாய் வாகனங்கள் அணிவகுக்கும் நிலையையே காண முடிகிறது.
அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் ஹவுஸ் புல்லாக வருகின்றன. விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக பயணிகள் ஆதங்கத்துடன் கூறுவதை காண முடிகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு நான்-ஏசி பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications