பெரம்பலூர், திருச்சி, அரியலூர் விவசாயம்.. கிருஷ்ணகுமார் புட்டு புட்டு வெச்சிட்டாரு.. அரசின் முடிவு?
சென்னை: தமிழகத்தில், மக்காச்சோளம், பருத்தி விளைச்சலில் விவசாயிகள் நாளுக்கு நாள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வரும்நிலையில், இயற்கை சீற்றத்தால் பாதிப்படையும் விவசாய பொருள்களுக்கு, உரிய இழப்பீடும், தரமான விதைகளையும் வழங்கிட உதவ வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரியலூர்- பெரம்பலூர்- திருச்சி மாவட்ட பருத்தி அறவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் டிரேடர்ஸ் சங்க மண்டல செயலாளர் கிருஷ்ணகுமார், விவசாயிகள் நலன் கருதி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

விளைச்சல் வருமானம்: அந்த கடிதத்தில் பருத்தி, சோளம் விளைச்சலின் வருமானம் மற்றும் செலவினங்களையும் தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த கடிதத்தில் கிருஷ்ணகுமார் மேலும் தெரிவித்திருப்பதாவது:
வானம் பார்த்த பூமியான அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றிலும் நீண்ட காலமாக ஆடிப்பட்டமாக பருத்தி, மக்காசோளம், மிளகாய், கம்பு கடலை போன்ற பயிர்களை விவசாயிகள் காலம் தொட்டு செய்து வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, குறிப்பாக இந்த 2 வருடமாகவே ஒரு ஏக்கருக்கு பருத்தி, மக்காச்சோளம் விளைச்சலில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை.
சுமார் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது கடந்த 2 ஆண்டுகளாகவே, ஒரு ஏக்கருக்கு பருத்தி/ மக்காச்சோளம் விளைச்சல் வெகுவாக குறைவதற்கு காலாவதியான மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே என்பது முதன்மை காரணமாக தெரியவருகிறது.!
நோய் தாக்குதல்: இரண்டாவது, பருவநிலை மாற்றத்தால் பருவம் தப்பிய மழை, மக்காச்சோளத்தை தாக்கிய படைப்புழு பூச்சி, போன்ற கடுமையான நோய்களின் தாக்குதலாலும் அதிக மழை பெய்து பருத்தி வெடிக்கும் தருவாயில் காய் கருகி கருப்பு ஏற்பட்டு கீழே விழும் சூழல் உள்ளது.. அதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள செலவினங்களே இப்போதும் நடைமுறையில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டுமே ஒரு குவிண்டால் ரூ.10500/- வரை இருந்தது. ஆனால், அதன்பிறகு இப்போது எல்லாம் ஒரு குவிண்டால் ரூ.6500/- வரை மட்டுமே உள்ளது.
இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்க்கும் பொழுது இனி வரும் காலங்களில் அரியலூர் / பெரம்பலூர்/திருச்சி மாவட்டத்தை சார்ந்த பருத்தி/ மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி, பெருத்த நஷ்டத்தையும் சந்திக்ககூடிய நிலைமை உள்ளதை அறிய முடிகிறது.
விவசாய பொருட்கள்: எனவே, இதனை கருத்தில் கொண்டு, நிலத்தின் மண்தன்மையை காத்தும், தரமான விதைகளை வழங்கி, நல்ல மகசூல் கிடைக்கவும், இயற்கை சீற்றத்தால் பாதிப்படையும் விவசாய பொருள்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக முதல்வராகிய தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்" என்று அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் சார்பாக கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications