சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நிச்சயம் நடக்கும்! எப்போது தெரியுமா? ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்க இருந்த பார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் தொடர்பான வழக்கில் இந்த பந்தயம் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தகவல்களைத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்க இருந்தது. அத்துடன் இந்தியன் ரேசிங் லீக் போட்டிக்கான கார் பந்தயங்களும் நடக்க இருந்தது. அதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு இருந்தது.

சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ சர்கியூட்டில் இந்த ரேஸ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது,.. தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
சென்னை கார் பந்தயம்: இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகத் தென்னிந்தியாவில் இரவு நேரத்தில் நடக்கும் முதல் கார் ரேஸாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த போட்டியை நடத்துவதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நேரத்தில் சென்னையில் பெருமழை கொட்டி தீர்க்கவே போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. போட்டி இதன் பிறகு மீண்டும் நடக்குமா என்பதில் குழப்பம் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான வழக்கில் இந்த ரேஸ் போட்டி அடுத்து எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு: சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என அரசு தரப்பிற்குக் கேள்வி எழுப்பினார்.
எப்போது நடத்தப்படும்: இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்குப் பிறகு கார் பந்தயம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications