Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக 75: 'இன எதிரிகளின் சிம்ம சொப்பனம்! சாமானியனுக்கு வாராது வந்த மாமணி- சம்பவங்களின் சாம்ராஜ்யம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற தமிழ்நாட்டில் ஆளும் அரசியல் கட்சி பவள விழா (75-வது ஆண்டு) காண்கிறது. இந்திய நிலத்தில் திராவிடர் இயக்கமும் அது பெற்றெடுத்த 'தலைச்சான் பிள்ளை' அரசியல் கட்சியான திமுகவும் இன்றளவும் தன் கொள்கை பாய்ச்சலில் சமரசமின்றி களமாடி வருவது தமிழருக்கு ஆகப் பெரும் கேடயமாக திகழ்கிறது.

1916-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணமானது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய பெரு நிலம். அன்றைய சமூக, அரசியல் சூழ்நிலைகளில் பிராமணர் அல்லாத மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமைகளைப் பெறவும், சமூக வாழ்வியலில் விடுதலை பெறவும் குரல் கொடுக்க வேண்டிய நிலைவுக்கு ஆதிக்கம் தலைவிரித்தாடியது. அதனால் 1916-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் South Indian Liberal Federation என்ற அரசியல் கட்சி உருவானது. தமிழ்நாட்டில் இன்று 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் 'இந்திய' கட்சிகளை அலறவைக்கும் 'திராவிட கட்சிகள்' அத்தனைக்கும் தாய்மடிதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதுதான் அது நடத்திய ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சி- நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது.

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

சுயமரியாதை இயக்கம்: நீதிக்கட்சி உருவான காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாட்டின் முகங்களில் ஒருவராக இருந்தவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பிராமணர் ஆதிக்கத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி மூலமாக சமூக விடுதலைக்குப் போராடி தோல்வியைத் தழுவினார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். இதனால் நீதிக்கட்சி அரசியல் களத்தில் வலிமையாக நின்ற காலத்தில் 1925-ம் ஆண்டு, தேர்தல் அரசியலில் பங்கேற்காத, முற்று முழுதாக தமிழர்கள் அல்லது திராவிடர்களின் சமூக விடுதலைக்கான ஒரு பிரசார இயக்கமாக, பகுத்தறிவு இயக்கமாக சுயமரியாதை இயக்கத்தை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தொடங்கினார். அன்றைக்கு தமிழ்ச் சமூகம் இப்படித்தான் தன் பெயருக்குப் பின்னால் ஜாதியை சேர்த்துக் கொண்டு எழுதும் வழக்கம் இருந்தது. சுயமரியாதை இயக்கம் வீறு கொண்டு பெரும் பாய்ச்சலில் பாயும் போது நாயக்கர் பட்டத்தை கைவிட்டு ஈ.வெ.ராமசாமி என்றானார். அவர்தான் தந்தை பெரியார் என்றும் தமிழ்நாட்டு மக்களின் மகத்தான தலைவராக கொண்டாடப்படுகிறார்.

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

சமூக அரசியல் விடுதலை: தேர்தல் அரசியல் களத்தில் நீதிக்கட்சி, சமூக விடுதலை களத்தில் சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்தும் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த கல்வி, வேலைவாய்ப்பு, ஜாதி, ஆண்-பெண் பாலினம், மொழி, கலாசாரம் என சகலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக சண்டமாருதங்களாய்- இரட்டை குழல் துப்பாக்கிகளாக களமாடின. 1938-ம் ஆண்டு தமிழ்நாடு முதலாவது இந்தி ஆதிக்கப் பெரும் போரை நடத்தியது. அந்த போரில் உதயமானது தமிழ்நாடு தமிழருக்கே- அதாவது அன்றைய சென்னை மாகாணம் தனி ஒரு குடியரசு நாடாக திகழ வேண்டும் என்பது.

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

நீதிக்கட்சியும் சு.ம. இயக்கமும் இணந்து தி.க: 1939-ம் ஆண்டு நீதிக்கட்சி வலுவிழந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்த பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். இந்த நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. அன்றைய திராவிடர் கழகம் கட்டி வா என்றால் வெட்டி வா என வாள் வீச்சோடு பாயும் இளைஞர் பட்டாளத்தால் நிரம்பி வழிந்தது. தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் சமூக விடுதலைக்கான ஒரு இயக்கத்தில் அத்தனை அத்தனை லட்சம் பேர் அணி அணியாக திரண்டனர். இந்த திராவிடர் கழகமும் பிளவை சந்தித்தது. அது 1949-ம் ஆண்டு.

திமுக உதயம்: 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் பெருவாரியான இளைஞர்கள் பட்டாளம் சி.என்.அண்ணாதுரை என்கிற இன்று நாம் பேரறிஞர் அண்ணா என போற்றுகிற பெருந்தகையாளர் தலைமையில் இதே செப்டம்பர் 17-ந் தேதி 'திராவிட முன்னேற்ற கழகம்' (திமுக) என்ற புதிய "இயக்கமாக" உருமாறியது. அப்போதும் கூட திமுக தேர்தலில் பங்கேற்காத சமூகப் புரட்சிக்கான- தென்னிந்தியா பிரதேசங்களை உள்ளடக்கிய "திராவிட நாடு" கோருகிற ஒரு விடுதலை இயக்கம்தான். இன்றைக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிற குலத்தொழில் திட்டமான விஸ்வகர்மா திட்டத்துக்கு முன்னோடியாக ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்துக்கு எதிராக 1953-ல் சமூகப் புரட்சி இயக்கமாக இருந்த காலத்திலேயே போராடி ஒழித்தது திமுக என்பது சரித்திரம்!

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

1956 முதல் 2023 வரை: 1956-ம் ஆண்டு திருச்சியில் திமுகவின் 2-வது மாநில மாநாடு. அப்போதுதான் முதன் முதலாக தேர்தல் அரசியலில் அதாவது தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பது அம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அத்தேர்தலிலும் கூட திமுக முன்வைத்த பிரதான முழக்கம், இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த ஒரு மாகாணமும் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக் கூடிய உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பது- அதாவது இன்றைக்கு ஐ.நா. சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக் கூடிய - பிரிந்து சென்று தனிநாடு உருவாக்கிக் கொள்ளக் கூடிய சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாநிலத்துக்கும் உண்டு; அதைப் பெறுவது திமுகவின் முதல் இலக்காக இருந்தது. அந்த தேர்தலில் 112 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 15 இடங்களில்தான் திமுக வென்றது.

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

இன்றைக்கும் தலைப்புச் செய்தியாக.. : அங்கிருந்து தொடங்கிய திமுக எனும் சரித்திரத்தின் புலிப்பாய்ச்சல் இப்போது 2023-ம் ஆண்டு வரை 'இந்திய' அரசியலில் மகத்தான தவிர்க்க நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆகப் பெரும் 2 கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட பிரம்மாண்டமான அரசியல் கட்சியாக வேரும் விழுதுகளாய் விருட்சமாய் விரிவானத்தில் தலைமுறைகளைக் கடந்து தலைப்புச் செய்திகளாக.. பேரறிஞர் அண்ணா தொடங்கி இன்றைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை "இனமான" எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

 Platinum Jubilee year: How DMK emerge as Tamilnadus Identiy?

சாதித்ததுதான் என்ன?: 1967-ம் ஆண்டு முதன் முதலாக திமுக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்திய அரசியல் சரித்திரத்தில் முதல் முறையாக மாநில கட்சி ஒன்று மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். அன்று முதல் இன்று வரை- அதாவது பெண்களுக்கு மாதம் ரூ1,000 திட்டம் வரை திமுக அரசு செய்திருக்கும் சமூகப் புரட்சியால்தான் இன்றைக்கும் 'தமிழ்நாடு' உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது! திமுக சமூக, அரசியல் களத்தில் சாதித்த சாதனைகள் தனிப் பெரும் நூலாக அல்ல.... பல தொகுதிகளைக் கொண்ட பெருநூலாகத்தான் உருவாகும்.

75 ஆண்டுகால திமுக, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிய காலத்தில் சாதித்தவைகளில் ஒன்றிரண்டு இவை...

கல்வியில் திமுக: 1968ல், முதலாமாண்டு மட்டுமிருந்த இலவச கல்வி, கருணாநிதி முதல்வரான பின் முழுப் பட்டபடிப்புக்கும் இலவசமாக்கப்பட்டது. போக்குவரத்து வசதியின்றி இடைநிற்றல் கூடாதென்பதற்காக மாணவர்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கி, 2010ல் அரசு கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பையும் இலவசமாக்கியது திமுக. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் பல புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குப் போக்குவரத்து கட்டணத்தை நீக்கி அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

கலை அறிவியல் கல்லூரி: 1967-ல் தமிழகத்தில் இருந்த 109 கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டு மட்டுமே அரசு கல்லூரிகள். 1,31,093 மாணவர்கள் படித்தனர். கருணாநிதி ஆட்சியில் (1969-1976) 68 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2010 -ல் 587 ஆக வளர்ந்தது. இதில் 62 அரசு கல்லூரிகள், 9 பல்கலைக்கழகக் கல்லூரிகள், 133 அரசு உதவி கல்லூரிகள், 383 சுயநிதிக் கல்லூரிகள். மாணவர்கள் - 7,09,162 . இன்று இதனைவிட கூடுதல் எண்ணிக்கை.

மருத்துவ கல்வி: 1966ல் தமிழ்நாட்டிலிருந்த 9 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று தனியார் கல்லூரி. மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவேண்டுமென்ற திமுகவின் நோக்கத்தின் பலனாக, 2010ல் எம்.பி.பி.எஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள் 17 ஆகவும், பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற இதர மருத்துவப் படிப்புக் கல்லூரிகள் 33 ஆகவும் அதிகரித்தன.

சட்டக் கல்வி: 1966ல் சட்டக் கல்லூரியின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒன்று மட்டுமே இருந்தது. இது திமுகவின் தலைமையின் கீழ் 2010ல் 8 சட்டக் கல்லூரிகளாக அதிகரித்தது. இவற்றில் ஒன்று தனியார் கல்லூரி.

ஓபிசி இலாகா: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இந்தியாவின் முதல் அமைச்சரை உருவாக்கியது திமுக. பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர்களுக்கான கல்வி, தொழில் பயிற்சி , நில சீர்திருத்தம், சமூகநீதி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான வழங்கப்பட்டன.

ஜாதி மறுப்பு திருமணம்: கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்க விருதுகள் அறிவித்தார். இது சமூக நல்லிணக்கத்துக்கு உதவுவதோடு சமத்துவத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் ஒரு காரணமாக இருக்கிறது.

பிற்படுத்தபப்ட்டோர் இட ஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் மூலம் இப்போது அவர்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்குத் தங்குமிடம், உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எம்பிசி இடஒதுக்கீடு: வன்னியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் களுக்கு 20% இட ஒதுக்கீட்டை திமுக அரசு அறிமுகப்படுத்தியது, இந்த அதிகாரமளிக்கும் முன்முயற்சி, அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கல்வி மற்றும் பொது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்தது. இதன் விளைவாக அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க உதவியது.

விதவைகள் மறுவாழ்வு: தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவைகள் மறுமணத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பஸ் பாஸ்ஸும் வழங்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்: 1966ல் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 9 மட்டுமே இருந்தன. திமுக ஆட்சியில் 2010ல் அசாதாரண வளர்ச்சியோடு 645ஆக உயர்ந்தது. இந்த வளர்ச்சி, பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் பன்மடங்காக உயர்த்தியது

பல்கலைக் கழகங்கள்: 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டிலிருந்த 3 பல்கலைக்கழங்களில் 1 தனியார் பல்கலைக்கழகம். திமுக அரசின் சீரிய செயல்பாட்டால் 2010ல் 24 அரசு பல்கலைக்கழகங்களாகவும், 25 தனியார் பல்கலைக்கழகங்களாகவும் உயர்ந்தது.

முஸ்லிம் இட ஒதுக்கீடு: முஸ்லீம் சமூகத்தின் மேம்பாட்டிற்காக 3.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது திமுக. அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதாரங்களை வழங்கி, ஒட்டுமொத்த உள்ளடக்கத்தை ஊக்குவித்தார். அவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான தேவைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதையும், சமத்துவத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது இந்த மைல்கல் முயற்சி.

அருந்ததியர் இடஒதுக்கீடு: அருந்ததியர் சமூகத்தை உயர்த்தும் நோக்கில் 3% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது திமுக. இந்தக் கொள்கை கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கல்வியறிவு விகிதங்கள் மேம்பட்டன. சுகாதார வசதிகள் சிறந்த முறையில் கிடைக்கப்பெற்று, வேலைவாய்ப்பு விகிதங்கள் அதிகரித்தன.

அனைத்து ஜாதி அர்ச்சகர்: அனைத்து சாதிகளிலிருந்தும் அர்ச்சகர்களை அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியது திமுக. பல்வேறு பின்னணியில் இருந்து 216 தனிநபர்கள் பயிற்சி பெறவும் அர்ச்சகர் பணியைத் தொடரவும் உதவினார். சமூகத்தின் ஆன்மீக கட்டமைப்பிற்கு பங்களிப்பதற்கும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இந்த முயற்சி விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளித்தது.

இப்படியான அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான கட்சியாக திமுக இருக்கிறது.. 2 ஆயிரம் ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் ஆன அத்தனை அடக்குமுறைகளையும் கல்வி, சமூக வளர்ச்சி எனும் பேராயுதங்களைக் கொண்டு உடைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறது.. அதனால்தான் 'இனமான' எதிரிகளுக்கு இன்றைக்கும் திமுக பேரலர்ஜியாக இருக்கிறது. ஏனெனில் திமுக- திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சரித்திரம்- பல சம்பவங்களின் சாம்ராஜ்யம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+