நாளை காலை வெளியாகிறது பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடந்தது.

தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள், 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பிளஸ் 1 தேர்வு எழுத பதிவு செய்தனர். அவர்களில் 8.16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6ஆம் தொடங்கி 25 வரை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக கடந்த மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவ மாணவிகள் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications