செஸ் ஒலிம்பியாட்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. குவிக்கப்பட்ட போலீஸ்.. 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெறும் நிலையில் இப்போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனையடுத்து அவர் பங்கேற்கும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமார் 22,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.

இதனையடுத்து இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் இந்தப் போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் விமான படைத்தளத்திற்கு வருகிறார். அதன் பின்னர் மாலை 6 மணியளவில் சாலை மார்கமாக அங்கிருந்து நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். இந்த தொடக்க விழா முடிவுற்றதையடுத்து, இரவு 7.50 மணியளவில் ஆளுநர் மாளிகை செல்கிறார். அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், விமான நிலையம், ஐஎன்எஸ் மற்றும் நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதியில் மட்டும் சுமார் 6,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications