கொரோனா என்றால் என்ன என்றே மோடிக்கு புரியவில்லை.. 3ம் அலை கூட வரும் ஆபத்துள்ளது.. ராகுல் விளாசல்!
சென்னை: கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது வரை 27,555,457 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்டிவ் நோயாளிகளாக 2,343,152 பேர் உள்ளனர். 24,893,410 பேர் குணமடைந்துள்ள நிலையில் 318,895 பேர் பலியாகி உள்ளனர். தினசரி கேஸ்கள் 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தாலும் இன்னும் பலி எண்ணிக்கை குறையவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று பேட்டி அளித்தார். மத்திய அரசு மீது சரமாரி புகார்களை அவர் வைத்தார்.

புரியவில்லை
அதில், கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் போல செயல்படுகிறார்,

இரண்டாம் அலை
கொரோனா 2-வது அலை தாக்கும் என்று பலமுறை நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். நான் எச்சரிக்கை விடுத்த போது என்னை ஏளனம் செய்தார்கள். கொரோனாவை வீழ்த்தி விட்டதாக பிரதமர் மோடி மேடைகளில் பேசினார். கொரோனா என்பது தொடர்ந்து உருமாற கூடிய வைரஸ்.

லாக்டவுன்
லாக்டவுன் தற்காலிக தீர்வு, வேக்சின் மட்டுமே நிரந்தர தீர்வு. மோடி காட்டிய "வித்தைகள்" காரணமாகவே இரண்டாம் அலை ஏற்பட்டது. இந்தியாவில் காட்டப்படும் கொரோனா பலி எண்ணிக்கை பொய். மத்திய அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது.

பலி எண்ணிக்கை
எதை எதிர்த்து போராடுகிறோம் என்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை. உருமாற்றம் அடைய கூடிய கொரோனா மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் 3% மட்டும் வேக்சின் போட்டு 97% பேருக்கு வேக்சின் போடாமல் இருந்தால், அது பெரிய தவறாக முடியும். தடுப்பூசி உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு வேக்சின் கிடைக்கவில்லை.
Recommended Video

வேக்சின்
வேக்சினை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலேயே மத்திய அரசு குறியாக இருந்தது. தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை மத்திய அரசு எடுக்க வேண்டும். வேக்சின் போடவில்லை என்றால் மூன்றாம் அலை ஏற்படும். இதே வேகத்தில் அரசு வேக்சின் கொடுத்தால் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் உள்ளது, என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications