"எப்படி இருக்கீங்க.?" முதல்வர் ஸ்டாலின் தோளில் கை போட்டு நலம் விசாரித்த பிரதமர் மோடி! சுவாரசியம்
சென்னை: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்களில் 4 தென்னிந்திய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக இன்று காலை பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி
அதைத் தொடர்ந்து பிரமதர் மோடி தமிழகம் வந்தார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை அளிக்க உள்ளார். இதில் கலந்து கொள்ளப் பெங்களூரில் இருந்து மதுரைக்குப் பிரதமர் மோடி வருகை தந்தார்.

தனி விமானம்
தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து மதியம் 2 மணியளவில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, மதுரை வந்தடைந்தார். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மற்றும் சாலை மார்க்கம் என வழிகளிலும் பிரமதரை அழித்து வரத் திட்டமிடப்பட்டு இருந்தது. வானிலை சரியாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார்.

உற்சாக வரவேற்பு
அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஒன்றாகப் பிரதமர் மோடியை வரவேற்று இருந்தனர். அதைத் தொடர்ந்து காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு வரும் வழியில் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
காரின் பக்கவாட்டில் நின்ற பிரதமர் மோடி தன்னை வரவேற்கத் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் காந்தி குல்லாவுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். அதேபோல ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் காந்தி தொப்பியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் இந்த பட்டமளிப்பு விழா தொடங்கப்பட்டது.

நலம் விசாரிப்பு
இதற்கிடையே பட்டமளிப்பு விழா தொடங்கும் முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தோளில் கை போட்டபடி பிரதமர் மோடி நலம் விசாரித்தார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்தச் சூழலில் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி நலம் விசாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications