குறைந்த நாட்களில்.. சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்.. தமிழ்நாடு அரசை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி
சென்னை: 75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமை. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி இன்று சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் விழாவில் பேசினார்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா இன்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் ரவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அமைச்சர்கள், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மோடி பேச்சு
இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமை. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். மிக குறைந்த நாட்களில் சிறப்பான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அதிதி தேவோ பவ என்று பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பெருமையுடன் சொல்லப்பட்டுள்ளது. விருந்தோம்பல் பற்றி திருக்குறளில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சொன்னது போல விருந்தோம்பல்தான் நம்முடைய கலாச்சாரம். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில்தான் அதிக அளவில் வீரர்கள், வீராங்கனைகள், நாடுகள் கலந்து கொள்கின்றனர். இதுவரை இவ்வளவு பிரம்மாண்டமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் நடந்ததே இல்லை. 70க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் தீபம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

பாராட்டு
செஸ்ஸின் பிறப்பு இடத்தில் முதல்முறை இந்த தொடர் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் சதுரங்க பல்லவ நாதர் என்பவருக்கு கோவில் கூட உள்ளது. கடவுள் செஸ் விளையாடியதாக இந்த கோவில் வரலாறு சொல்கிறது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டிற்கும் செஸ்ஸிற்கும் தொடர்பு உள்ளது. செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்குவதில் பவர் ஹவுஸாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு பல கிராண்ட் மாஸ்டர்களையும், அறிவு ஜீவிகளையும் உருவாக்கி உள்ளது.

சிறப்பான ஏற்பாடு
தமிழ்நாட்டில் இந்த போட்டி நடப்பது மிக சிறப்பான, மிக பொருத்தமான ஒன்று. சென்னை வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் மகாபாலிபுரத்தை சுற்றி பார்க்க வேண்டும். கொரோனா காலத்தில் உலகமே நின்று போனது. மொத்த உலகமும் அப்படியே அசையாமல் நின்று போனது. இப்போது மீண்டும் உலகம் செயல்பட தொடங்கி உள்ளது. விளையாட்டு மட்டுமே உலகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இந்த செஸ் போட்டி சுற்றுலா துறையை மீண்டும் வளப்படுத்தும்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும். சர்வதேச போட்டிக்கு இன்று மிக முக்கியமான நாள். விளையாட்டில் தோல்வியாளர்கள் என்பதே கிடையாது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நாம் அனைவருமே வெற்றி பெறுபவர்கள்.. எதிர்கால வெற்றியாளர்கள். அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications