அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.. மேல்முறையீடு செய்கிறார் ராமதாஸ்
சென்னை: அன்புமணி ராமதாஸ் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துகிறார். இதற்கு தடை கோரி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அன்புமணி பொதுக்குழு நடத்த அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுக்கு ராமதாஸ் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அதேபோல தலைமை நீதிபதியும் ஒப்புதல் அளித்தால், வழக்கை விசாரிக்க உள்ள இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தால் இன்றைய தினமே வழக்கு விசாரிக்கப்படும்.

இதற்கு முன்னர் பல வழக்குகள் இதேபோன்று விசாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ராமதாஸின் மேல்முறையீட்டு மனுவும் விசாரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
வழக்கு ஏன்?
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அன்புமணி தலைவராக உரிமை கோரி வருகிறார். ஆனால் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என்றும், எனவே கட்சியின் தலைவர் பொறுப்பு நிறுவனருக்கே வந்துவிடும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். மட்டுமல்லாது ஆக.19ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை அவர் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். மறுபுறும் நாளை பொதுக்குழு கூட்டத்தை கூட்டப்போவதாக அன்புமணி அறிவிக்க, அதை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருவரையும் அவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதில் அன்புமணி மட்டும் நேரில் ஆஜரான நிலையில், ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணை முடிவில், அன்புமணி பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு மேல் முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications