செதில் செதிலாக உடைந்த "மெகா கூட்டணி".. விழிக்கும் முன் கலைந்த கனவு.. எடப்பாடிக்கு பாமக வைத்த செக்!
சென்னை: அதிமுக மெகா கூட்டணி அமைக்க போகிறது என்று எப்போது எடப்பாடி சொன்னாரோ.. அப்போதில் இருந்துதான் வரிசையாக அதிமுகவிடம் இருந்து முக்கிய கட்சிகள் பல விலகி செல்ல தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அடுத்தடுத்து முக்கிய கட்சிகள் சொன்ன நிலையில்.. எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணியை எப்படி உருவாக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.
சூரிய ஒளியில் கரையும் ஐஸ் கட்டி போல ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நயினார் நாகேந்திரன் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்ததால் பாஜக - அதிமுக கூட்டணியும் உடைந்தது!
அதிகாரபூர்வமாக இன்று அதிமுகவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் - சிங்கிள்!

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமைக்கு ஆசைப்பட்டு கடைசியில் ஒற்றை கட்சியாக அதிமுக மாறி உள்ளது. அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி மோதல் காரணமாக தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படும் நிலையில்தான் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி.. மெகா கூட்டணி அமைக்க போகிறோம் என்று நாமக்கல்லில் கர்ஜனை செய்தார். அதை கேட்கும் போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆஹா அதிமுக மெகா கூட்டணி அமைக்கிறதா.. சூப்பர் என்று ரத்தத்தின் ரத்தங்கள் குஷியில் குதித்தனர். ஆனால் ரியாலட்டிதான் அதிமுகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

என்ன சொன்னார் எடப்பாடி?
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். ரத்தத்தின் ரத்தங்கள் மெகா கூட்டணி என்றதும் நினைத்தது 2019 லோக்சபா கூட்டணிதான். அதோடு அமமுகவும் சேரும் என்றே அதிமுகவினர் பலரும் எதிர்பார்த்தனர்.

அமமுக
அதாவது அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக + அமமுக ஆகிய கட்சிகள் சேரும் என்று எதிர்பார்த்தனர். அதன்படியே கூட்டணிக்கு டிடிவி தினகரனும் கிரீன் சிக்னல் கொடுத்தார். திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்போம். நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்திய முடியும் என்று டிடிவி தினகரன் பேசினார். ஆஹா.. நல்லா இருக்கே.. டிடிவியே இறங்கி வருகிறாரே என்று அதிமுகவினர்.. எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை பாட தயாராகிக்கொண்டு இருந்தனர்.

எடப்பாடி தடுத்தார்
ஆனால் அதை எடப்பாடி குறுக்கே புகுந்து தடுத்தார். டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் 1% கூட இடம் கிடையாது என்று எடப்பாடி கூறினார். உடனே டிடிவி தினகரனும்.. உங்க கூட எல்லாமே 0.25 சதவிகிதம் கூட இடம் கிடையாது என்று கூறினார். இவர்கள் இருவரும் எடுத்த கணக்கு கிளாஸால் அதிமுக + அமமுக கூட்டணி உருவாகும் முன்பே உடைந்துவிட்டது. சரி அதிமுக + பாஜக + பாமக கண்டிப்பாக இணையும் என்றுதான் நிர்வாகிகள் பலரும் நினைத்தனர். ஆனால் பாமகவும் அதிமுக கூட்டணியே வேண்டாம் என்று அறிவித்து உள்ளது. அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறதா, மெகா கூட்டணி வைப்பீர்களா என்று என்று பாமக தலைவர் தலைவர் அன்புமணியிடம் கேட்கப்பட்டது.

அன்புமணி
அதற்கு அன்புமணி ராமதாஸ், 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி தலைமையில் களமிறங்கும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும். திராவிட கட்சிகளுடன் இணைய மாட்டோம். அவர்கள் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் திட்டமிடுகிறார்கள். அது தவறு. பாமக 30, 40 ஆண்டுகளுக்கு திட்டமிடுகிறது. இவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

அவுட்
செமி பைனலில் களமிறங்கும் இந்திய டி 20 கிரிக்கெட் ஒப்பனர்கள் போல அதிமுகவின் மெகா கூட்டணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் காலியாகி வருகின்றன. இப்போது மீதம் இருப்பது அதிமுக + பாஜக + தேமுதிக மட்டும்தான். ஆனால் தேமுதிகவிடம் பெரிய வாக்கு வாங்கி இல்லை. ஒரு எம்எல்ஏ, எம்பி கூட இல்லை. அப்படி இருக்கும் போது அந்த கட்சி கூட்டணியில் இருப்பதால் பெரிய பயன் இருப்பதாகவும் தெரியவில்லை. மீதம் இருப்பது என்னவோ அதிமுக + பாஜக மட்டும்தான். இரண்டு கட்சிகள் இருந்தால் அது எப்படி மெகா கூட்டணி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமமுக
அதிமுகவின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது முக்குலத்தோர் எதிர்ப்பு. எடப்பாடி பழனிசாமி தலையெடுத்த பின் அதிமுகவில் முக்குலத்தோர் ஓரம்கட்டப்பட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை சமாளிக்க அமமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். அமமுகவுடன் இணைந்தால் தென் தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் சமாளிக்க முடியும்..எடப்பாடி அப்படி செய்யும் பட்சத்தில் அதிமுக கூட்டணி மெகா கூட்டணியாக மாறும் சான்ஸ் கொஞ்சம் இருக்கிறது.. செய்வீர்களா.. எடப்பாடி.. செய்வீர்களா?












Click it and Unblock the Notifications