“2026ல் பாமக ஆட்சிதான்.. அதுவும் கூட்டணி ஆட்சி” - அன்புமணி ராமதாஸின் அடுத்த பிளான் இதுதானா?
சென்னை : "2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது. பாமக கூட்டணியின் ஆட்சியாக இருக்கும்" என பாமகவின் புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற முழக்கத்துடன் தனித்துச் சந்தித்த பாமக, 2021ல் பின்வாங்கி அதிமுக கூட்டணியில் இணைந்தது.
இந்நிலையில் தற்போது 2026 தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பாமக தலைவர்
கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆனாலும், இதுவரை தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்ற விரக்தியில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். கூட்டணி அமைத்து போட்டி, தனித்துப் போட்டி என எப்படி தேர்தலை எதிர்கொண்டாலும், நினைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற முடியாமல் விக்கித்து நிற்கும் பாமகவை வலுப்படுத்துவதற்காக, கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

அன்புமணி ராமதாஸ்
2004ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் அன்புமணி ராமதாஸ். இந்திய வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர் என்ற பெருமைக்குரியவர் அன்புமணி ராமதாஸ். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவரை தலைவராக்குவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் கட்சிக்கு செல்வாக்கை ஏற்படுத்த முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டு அன்புமணியை தலைவர் ஆக்கியுள்ளார்.

மாற்றம் முன்னேற்றம்
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற முழக்கத்துடன் தனித்துச் சந்தித்த பாமக-வுக்கு பரிசாக பெரிய தோல்வியே கிடைத்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். இது கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் முழக்கத்தைக் கைவிட்டு, அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது பாமக.

மீண்டும் முதல்வர் வேட்பாளர்?
இந்நிலையில்தான், கட்சியை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் தலைவராக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி மீண்டும் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றார்போலவே, 2026ல் பாமக ஆட்சி அமையும் என்றும், நமக்கான நேரம் வந்து விட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் அன்புமணி.

தலைவர்களுடன் சந்திப்பு
பா.ம.க தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களைச் சென்று சந்தித்துப் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

2026ல் பாமக ஆட்சி
இந்தச் சந்திப்பிற்கு பிறகு அன்புமணி செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். அதில் எங்கள் கட்சியின் இலக்கு பாமக ஆட்சிக்கு வரவேண்டும். அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது. கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும். பா.ம.கவை போல ஒருமித்த கருத்துக் கொண்ட கட்சிகளை நாங்கள் அணுகுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆட்சி
கடந்த 2016 தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ், 2021ல் கூட்டணியமைத்து போட்டியிட்டபோது முதல்வர் முழக்கத்தை கைவிட்டார். இந்நிலையில் பாமக தலைவராகி இருக்கும் அன்புமணி, இது பா.ம.க 2.0 எனக் கூறி கூட்டணி ஆட்சி அமைப்போம் என தற்போது கூறியிருக்கிறார். பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியிருப்பதன் மூலம் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications