எம்.ஜி.ஆர்.விரும்பி சாப்பிட்ட மேட்டூர் டேம் மீன்கள்! 1,000 கிலோ மீன் வாங்கி பாமக எம்எல்ஏ விருந்து!
சென்னை: மேட்டூர் அணையில் பிடிக்கப்பட்ட ப்ரெஷ்ஷான 1,000 கிலோ மீன்களை வாங்கி சட்டசபையில் 800 பேருக்கு மணக்க மணக்க விருந்து வைத்திருக்கிறார் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்.
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற தலைவர்கள் மேட்டூர் டேம் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்று கூறுகிறார் சதாசிவம் எம்.எல்.ஏ.
தூய்மையான காவிரி நீரில் வளரும் மீன்கள் என்பதால் கட்லா, ரோகு, மிர்கால் என அனைத்து வகை மேட்டூர் டேம் மீன்களும் சுவையில் டாப் 1 என சர்டிபிகேட் கொடுக்கிறார் அவர்.

தமிழக சட்டசபை
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 7வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் ஏற்பாட்டில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை ஊழியர்கள் என 800 பேருக்கு மீன் வறுவல், மீன் குழம்பு, சுடசுட சாதம் என மணக்க மணக்க மீன் சாப்பாடு பாக்ஸ்களில் பார்செல் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. இதற்காக மேட்டூர் டேமில் பிடிக்கப்பட்ட ப்ரெஷ்ஷான 1,000 கிலோ மீன்களை வாங்கி சென்னைக்கு கொண்டு வந்து கூடவே இருந்து சமைத்துக் கொடுத்துள்ளார் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்.

1,000 கிலோ மேட்டூர் டேம் மீன்கள்
1,000 கிலோ மீன்கள், அரிசி, சமையலர்கள் என இதற்காக மட்டும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே இது குறித்து கூறும் அவர், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற தலைவர்கள் மேட்டூர் டேம் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்றும் அந்தளவுக்கு வேறு எங்கும் இல்லாத சுவை மேட்டூர் மீன்களில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேட்டூர் அணை மீன்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் 2 கோடி மீன் குஞ்சுகளை புதிதாக விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மீண்டும் ஒரு விருந்து
மேட்டூர் மீனின் சிறப்பை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே சட்டசபை வளாகத்தில் தாம் இவ்வாறு விருந்து கொடுத்திருப்பதாகவும் தற்போது 200 முதல் 300 பேருக்கு மீன் சாப்பாடு பற்றவில்லை என்பதால் நடப்பு சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னர் மீண்டும் ஒரு 400 கிலோ மீன்களை வாங்கி வந்து இன்னொரு விருந்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் தெரிவித்தார்.

முதல் முறை
பொதுவாக மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது தான் அந்த துறையின் அமைச்சர் ஏற்பாட்டில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு இது போன்ற மீன் சாப்பாடு விருந்து சட்டசபை வளாகத்தில் நடைபெறும். ஆனால் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் இப்படி மீன் சாப்பாடு விருந்து கொடுப்பது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications