அதே தான்.. ஞாபகம் இருக்கா? சித்திரை முழுநிலவு விழா.. கட்சியினரை உற்சாகப்படுத்த அன்புமணியின் திட்டம்!
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் யூகங்களை வகுத்து வரும் நிலையில் பாட்டாளிகளை உற்சாகப்படுத்த 'சித்திரை முழு நிலவு பெருவிழாவை' மீண்டும் நடத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. ஆனாலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அது குறித்த முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்கள் மறைமுக பேச்சு வார்த்தைகள் என தற்போது இருந்து அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன? வருகின்ற நாடாளுமன் தேர்தலில் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதுதான் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்
கடந்த ஆண்டு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காவிரி உபநீர் திட்டம், அரியலூர் சோழர் பாசன திட்டம், கடலூர் என்எல்சி விவகாரம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து அந்தந்த மாவட்டங்களில் நடைபயணம் பேரணி ஆர்ப்பாட்டம் என தீவிர அரசியல் செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி நீட் தேர்வு வாரம் உள்ளிட்டவற்றில் அவரது தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸ் அரசுகளுக்கு அறிக்கையின் மூலம் தொடர்ந்து நெருக்கடியும் ஆலோசனைகளும் அளித்து வருகிறார்.

கூட்டணி நிலைப்பாடு
இளைஞரணி தலைவராக இருந்ததை விட கட்சியின் தலைவரான பிறகு அன்புமணியின் கால அரசியல் வேகம் எடுத்து இருப்பதாக கூறும் பாட்டாளி மக்கள் கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி என்பதை அன்புமணியின் இலக்காக இருக்கிறது அதை முன்னிறுத்தியே நாடாளுமன்றத் தேர்தலில் வியூகமும் இருக்கும் என கூறி வருகின்றனர். ஏன் அன்புமணியே பல நேரங்களில் அதனை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் திமுக அதிமுக பாமக கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்புகின்றன. கடந்த தேர்தலில் பாமக இடம் பெற்றிருந்த அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அதற்கு அடுத்த ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது.

நாடாளுமன்ற தேர்தல் 2024
இதனால் அந்தக் கட்சியின் வாக்கு வங்கி வட மாவட்டங்களில் ஓரளவு வலுவாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்றாலும் விழுப்புரம் அரியலூர் தர்மபுரி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் அந்தக் கட்சி நிர்வாக ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் வலுவாகவே இருக்கிறது. எனவே அந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது அரசியல் களத்தில் விவாத பொருளாகவே நீடித்து வருகிறது. ஆனால் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் பல மாத இடைவெளி இருப்பதால் தற்போதைக்கு அது குறித்து பேச வேண்டாம் என அந்த கட்சி தலைமை நினைக்கிறது.

உற்சாக திட்டம்
அதிமுக பாஜக கூட்டணியோடு தினகரனின் அமமுக, அன்புமணி ராமதாஸின் பாமக, விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்தால் பெருவெற்றி வரலாம் என பாஜக தலைமை விரும்புகிறது. அதே நேரத்தில் தற்போது சில மாதங்களாக திமுக தலைமையுடன் நேரடி மோதல் போக்கை பாமக கடைபிடிக்காமல் இருக்கிறது. இதனால் திமுக கூட்டணியில் அக்கட்சி இணையலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படி பல யூகங்கள் வெளியாகி வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் தான் அந்த கட்சியின் கூட்டணி வியூகம் வெளிப்படும் என்கின்றனர் அந்த கட்சியினர். இதனிடையே பாமக தொண்டர்களை சமுதாய ரீதியாக உற்சாகப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் அன்புமணி ராமதாஸ் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார்.

சித்திரை முழு நிலவு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா என்னும் பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக பிரச்சனை இருந்தது. இதை அடுத்து சில ஆண்டுகள் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெறவில்லை. தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகளும் பாமகவினரும் அந்த சந்திப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பாமகவினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த ஆணையிட வேண்டும் என கோரிக்கையை விடுத்தார்.

அன்புமணியின் திட்டம்
இதை அடுத்து அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு இருந்த நிர்வாகிகள் உற்சாகமாக விசில் அடித்து வரவேற்றனர். கைதட்டல் அடங்குவதற்கும் சில நிமிடங்கள் பிடித்தது. இதை அடுத்து தொண்டர்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் எனவே சித்திரை முழு நிலவு பெருவிழாவில் நடத்த வேண்டும் அதற்கு மருத்துவர் ஐயா ராமதாஸ் உத்தரவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார் அன்புமணி. தொண்டர்களின் ஆரவாரத்தை பார்த்த ராமதாஸ் லேசான புன்முறுவலுடன் அமைதியாகவே இருந்தார். அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வருகின்ற சித்திரை முழு நிலவு நிகழ்ச்சியை நடத்த அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வன்னியர் சமுதாய மக்களை ஒன்றிணைப்பதோடு தேர்தலுக்கும் அவர்களை தயார் படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படும் என நம்புகிறார். இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications