2 ஆப்ஷன்.. வேற மாதிரி கணக்கு போடும் பாமக.. பாஜக கூட்டணிக்கு கல்தா? ஈபிஎஸ் பிளானுக்கு கிரீன் சிக்னல்?
சென்னை : தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, பாஜக கட்டமைக்க விரும்பும் பெரிய அணியில் சேர்வதை விட, எடப்பாடி பழனிசாமி அணியுடன் தனியாக இணைவதையே விரும்புகிறதாம் பாமக.
2024 தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளைப் போட்டு வருகின்றன. அந்தவகையில், பாமகவும் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிரடி திட்டத்தில் இருக்கிறதாம்.
பாமக நிறுவனர் ராமதாஸின் முதல் ஆப்ஷன் திமுக என்றும், அடுத்த ஆப்ஷன் எடப்பாடி பழனிசாமி என்றும் சொல்கிறார்கள். அதிமுக, குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி அணியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறாராம்.
வாக்கு பலம் தங்களுக்கு எவ்வகையில் உதவும் என்பதன் அடிப்படையில் ராமதாஸ், இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது திட்டம் நிறைவேறுமா என்பது போகப்போகத் தெரியும்.

அதிமுக கூட்டணி சிக்கல்
2024 லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை அமைக்க விரும்புகிறது. இதற்காக பல்வேறு கட்சிகளுடன் இப்போதே பாஜக தலைமை பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் + ஈபிஎஸ், அமமுக, தேமுதிக, பாமக மற்றும் சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க விரும்புகிறது பாஜக. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியோ, ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார். அதற்காக, பாஜக கூட்டணியை கைவிடவும் அவர் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி உடைந்தால்
பாஜக வேண்டுமானால், ஓபிஎஸ், அமமுக, தேமுதிகவோடு கூட்டணி வைத்துக் கொள்ளட்டும், நாம் தனியாக நின்றே பவரை காட்டலாம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜகவே நம்மைத் தேடி வரும் என்றெல்லாம் ஈபிஎஸ் அணிக்குள் பேச்சு ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளும் தனித்து நிற்போம் எனப் பேசி வருகின்றனர். அப்படி, எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டு விலகும் பட்சத்தில், பாமக, ஈபிஎஸ் உடன் இணைய 'டபுள் ஓகே' எனும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக தான் முதல் சாய்ஸ்
பாமகவைப் பொறுத்தவரை கூட்டணிக்கு முதல் ஆப்ஷன் ஆளுங்கட்சியான திமுகவாகத்தான் இருக்கிறதாம். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறாராம். திமுக கூட்டணியில் இருந்தால் இந்த முறை நிச்சயம் அதிக இடங்களில் வெல்லலாம் என அவர் கணக்குப் போட்டிருக்கிறார் என்கிறார்கள். சிலபல மாதங்களாகவே, ராமதாஸின் கணக்குகள் திமுகவுக்கு சாதகமாகவே இருப்பதாகவும், திமுகவின் சிக்னலுக்காக டாக்டர் காத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் பாமக வட்டாரத்தினர். அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுக அல்லாத அணிக்கு தலைமை தாங்க விரும்பினாலும், ராமதாஸின் விருப்பம் இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது தானாம்.

அதிக சீட் ஆசை
எனினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் என ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால், பாமகவையும் சேர்த்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. 2024 தேர்தலில், திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. அவ்வாறு திமுக அதிக சீட்களில் போட்டியிட விரும்பினால் பாமகவை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இரண்டாவது சாய்ஸ்
பாமக நிறுவனர் ராமதாஸின் இரண்டாவது சாய்ஸ் எடப்பாடி பழனிசாமி தானாம். அதாவது, பாஜக - ஓபிஎஸ்- ஈபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டணி அல்ல, தனியாக நிற்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைக்க பாமக விரும்புகிறதாம். ஓபிஎஸ், தினகரனை ஏற்றுக்கொள்ள மறுத்து பாஜக கூட்டணியை விட்டு விலகி தனித்து நிற்க ஈபிஎஸ் முடிவெடுத்தால் பாமக ஈபிஎஸ் அணியோடு கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

வாக்கு வங்கி
இதற்குக் காரணம், பாமக பலமாக இருக்கும் பகுதிகளில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணிகளின் இணைவால் தங்களுக்கு எந்த அனுகூலமும் இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியால் பெரிய அளவுக்கு வோட் கன்வெர்ஷனை பெற்றுத் தர முடியும் என ராமதாஸ் நினைக்கிறாராம். ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்தால் தங்களுக்கான சீட் எண்ணிக்கை குறையும், அவர்கள் இல்லை என்றால் அடித்துப் பேசி அதிக தொகுதிகளை வாங்கலாம் என ராமதாஸ் கணக்குப் போட்டிருக்கிறாராம்.

வின் + வின் கூட்டணி
வட தமிழக மாவட்டங்களில், அதிமுக + பாமக கூட்டணிக்கு வலிமை அதிகம், பாமக வட மாவட்டங்களில் நல்ல வாக்கு வங்கியைக் கொண்டிருப்பது அதிமுகவுக்கும் உதவும், எடப்பாடி பழனிசாமி அணியும் அப்பகுதிகளில் பலமாக இருப்பதால், அது பாமகவுக்கும் உதவும். ஆனால், தென் மண்டலத்தில் பலம் வாய்ந்த ஓபிஎஸ், தினகரன், கொங்கு மண்டலத்தில் வளரும் பாஜக ஆகிய கட்சிகளால் நமக்கு பெரியளவில் நன்மை இல்லை என பாமக கருதுகிறதாம்.

சிக்னல்
நாம் ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதிகள் இருப்பது வடக்கில் தான், அங்கு எடப்பாடி பழனிசாமி அணியே நமக்குப் போதும் என ராமதாஸ் எண்ணி வருகிறாராம். இதையொட்டி, பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக முடிவெடுத்தால், தாம் கூட்டணியில் சேர தயார் என எடப்பாடி தரப்புக்கு சிக்னல் கொடுக்கவும் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் இன்னும் பல அதிரடி ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications