“ஓய்வுக்கு முன் இன்னோர் உச்சம் தொடுங்கள்”.. ரஜினிகாந்த்துக்கு வைரமுத்து மெசேஜ்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கவிதை வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. "ஓய்வுக்கு முன் இன்னோர் உச்சம் தொடுங்கள்.. அல்லது இன்னோர் உச்சம் தொட்டபின் ஓய்வு பெறுங்கள்" என அதில் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
ரஜினிகாந்த் தனது 74வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது ஸ்டைலில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
"வயிற்றில்
தொப்பை சேராத உடலோடும்
தலையில்
கர்வம் சேராத மனதோடும்
அரைநூற்றாண்டாய்
ஒரு நட்சத்திரம்
உச்சத்தில் இருப்பது
அத்துணை எளிதல்ல
ஆனால் இன்னும்
தேயாத கால்களோடு
ஓயாத ஓட்டம்
சூப்பர் நண்பரே!
ஓய்வு குறித்த சிந்தனை
உங்களுக்குண்டா?
தெரியாது
ஆயினும் ஒரு யோசனை
ஓய்வுக்கு முன்
இன்னோர் உச்சம் தொடுங்கள்
அல்லது
இன்னோர் உச்சம் தொட்டபின்
ஓய்வு பெறுங்கள்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசி இருந்தார் கவிஞர் வைரமுத்து. தங்கள் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வைரமுத்து, "கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும். அவருள் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடினோம். ஒரே ஒரு 'கிரீன் டீ'யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை; இடைவெளியும் இல்லை.
சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா, வாழ்வியல், சமூகவியல், கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன் முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது. நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை.
தவத்திற்கு ஒருவர்; தர்க்கத்திற்கு இருவர். நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக்கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன். இருதரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications