கிக்கே இல்லை.. போதைப்பொருள் தயாரித்த கெமிஸ்ட்ரி மாணவர்கள்.. கொடுங்கையூரில் கொத்தாக தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை, கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப் பொருளை தயார் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செளகார்பேட்டையில் கெமிக்கல் பொருள்களை வாங்கி வந்து வீட்டிலேயே போதைப் பொருளை தயார் செய்துள்ளனர். நண்பரின் வீட்டை ஆய்வகமாக மாற்றி பயன்படுத்தி வந்ததாகவும், போதைப் பொருளை தாங்கள் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவரது வீட்டுக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர்கள் சிலர் வந்து செல்வதாகவும், போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பிரவீனின் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சோதனையின்போது வீட்டையே ஆய்வகம் போல மாணவர்கள் பயன்படுத்தி வந்ததும், அந்த ஆய்வகத்தில் போதைப் பொருள் தயாரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரவீன், கிஷோர், ஞானப்பாண்டியன், நவீன், தனுஷ், பிளம்மிங் பிரான்சிஸ் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 6 பேருமே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். போதைப் பொருள் தயாரித்தவர்களின் சிலர் கல்லூரி மாணவர்களாகவும் உள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பாக அருண் என்ற நபரிடம் இருந்து இந்த போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. ஆனால், அது தரமில்லாமல் இருந்ததுடன் போலியானது என்பது தெரியவந்ததால், நண்பர்கள் இணைந்து தாங்களாகவே போதைப் பொருளைத் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
கெமிஸ்ட்ரி படித்து வரும் ஞானப் பாண்டியன் என்பவரின் மூலமாக சென்னையில் செளகார்பேட்டை பகுதிக்குச் சென்று கெமிக்கல் பொருளை வாங்கி வந்துள்ளனர். பின்னர், பிரவீனின் வீட்டை ஆய்வகமாக மாற்றி போதைப் பொருள் தயாரிப்பதை முதலில் சோதனை செய்துள்ளனர். பின்னர், தங்களுக்குத் தெரிந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சிலருக்கும் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளனர்.
இதில், கிஷோர் என்பவர் திமுக கவுன்சிலரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரின் மகன்தான் கிஷோர். தற்போது இவர்கள் அளித்த தகவலின்பேரில் அருண் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவர்களிடம் இருந்து 245 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மற்றும் எடை போடும் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். இரண்டு லேப்டாப், 7 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
அருணுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக ரெடின்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் சேர்ந்து வீட்டையே ஆய்வகமாக மாற்றி போதைப் பொருள் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















Click it and Unblock the Notifications