தாயும் மகளும் சேர்ந்து கோடியில் மோசடி.. ஏர்ப்போர்ட்டில் வைத்து காப்பு மாட்டிய போலீஸ் - நடந்தது என்ன?
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி லட்சக் கணக்கில் மோசடி செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற தாய் - மகளை போலிஸார் கைது செய்துள்ளனர்.
பலரை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்றவர்களை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலையம் சென்றதால் பிடிபட்டனர்.

போலி நிறுவனம்
சென்னை வேளச்சேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் தன்ஷிகா (34). ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என எண்ணி தனது நண்பரிடம் விசாரித்துள்ளார். அவர் மூலம் கோயம்பேட்டில் உள்ள Assyst Career Generating Pvt Ltd என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.

போர்ச்சுகலுக்கு அனுப்ப
அங்கு கிளீனா (29), மற்றும் அவரது அம்மா அனிதா (59) ஆகியோர் அப்பெணிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளனர். 25 லட்ச ரூபாய் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பிய தன்ஷிகாவும், அவர்களிடம் பல கட்டங்களாக ரூ. 25 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

லுக் அவுட் நோட்டீஸ்
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். நெருக்கடி கொடுத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் வரை திரும்ப தந்துள்ளனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சி.எஸ்.ஆர் பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. பின்னர் தன்ஷிகா அடையார் துணை ஆணையர் மகேந்திரனிடமும் புகார் தெரிவித்துள்ளார். அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார்.

விமான நிலையத்தில் கைது
இன்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். கிளீனா அமெரிக்கா செல்லவிருந்த நிலையில், அவரது தாய் வழியனுப்பச் சென்றிருந்தார். அப்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்ததால் அவர்களை பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்ததில் இவர்கள் இது போல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications