”மது விருந்து, பைக் ரேஸ்” புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குவியும் கட்டுப்பாடு..காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்குள் முடிவுக்கு வர வேண்டும் என்றும், மெரினாவின் காமராஜர் சாலையில் மாலை 7 மணிக்கு பின் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றும் பைக் ரேஸ்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ட்ரோன்கள் மூலம் காவல்துறையினர் காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2023ம் ஆண்டு புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட நடத்த நட்சத்திர உணவகங்களும், ரிசாா்ட்டுகளும் தயாராகி வருகின்றன.
டிசம்பர் 31 மாலை தொடங்கி ஜனவரி 1 அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காவல்துறை கட்டுப்பாடு
குறிப்பாக டிசம்பர் 31ம் தேதி இரவு உணவகங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி, விருந்து நடைபெறும் பகுதி என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வாகன விவரத்தை பதிவு செய்ய வேண்டும், நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நேரக் கட்டுப்பாடு
அதேபோல் உணவு மற்றும் மதுபான சேவையை நள்ளிரவுக்குள் நட்சத்திர விடுதிகள் முடித்துக் கொள்ள வேண்டும், நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும், பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதிகளுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டுக்கான கொண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து சங்கர் ஜிவால் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் நட்சத்திர விடுதிகள் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், நட்சத்திர விடுதிகளின் கொண்டாட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பைக் ரேஸ் தடுக்கப்படும்
அதுமட்டுமல்லாமல், நட்சத்திர விடுதிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், மதுபோதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதுமட்டுமல்லாமல், மெரினா காமராஜர் சாலையில் டிசம்பர் 31ல் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும், இரவு நேரத்தில் தெளிவாக படம்பிடிக்கக் கூடிய ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும், சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி ரோந்து வாகனம் மூலமாக பைக் ரேஸ் தடுக்கப்படும் என்று சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மதுவிருந்துக்கு கட்டுப்பாடுகள்
மேலும், அதிகளவில் மது போதையில் உள்ள நபர்களை விடுதிக்குள் அனுமதிக்க கூடாது என்றும், ஓட்டல்களில் விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், மது விருந்து நடைபெறும் இடத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications