"டோபமைன்".. அடுத்தடுத்த சம்பவம்.. ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி கடனாளியாகி பலர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு இதனை தடை செய்தாலும் நீதிமன்றம் தரப்பில் இந்த தடை ரத்து செய்யப்பட்டு இந்த விளையாட்டு சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விளையாட்டிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம்
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவாகியிருந்தன. அதாவது இந்த வழக்குகள் நேரடியாக இதுபோன்று பதிவாகவில்லை. மாறாக, இந்த விளையாட்டில் தோல்வியடைந்ததால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொள்வது, அல்லது தோல்வியிலிருந்து மீள கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, அதற்கு இடையூறாக இருப்பவர்களை கொலை செய்வது என குற்றங்கள் அதிக அளவில் அரங்கேறியுள்ளன.

பணம் பணம் பணம்
எனவே இந்த விளையாட்டின் தாக்கத்திலிருந்து எப்படி நாம் தப்பிப்பது என்பது குறித்து சில நுணுக்கங்களை பார்க்கலாம் . இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் முதலில் நீங்கள் விளையாடத் தொடங்கிய 2 நாட்களுக்கு பணம் குவிந்துகொண்டிருக்கும். பின்னர் அடுத்த 4 நாட்களுக்கு பணத்தை இழக்க தொடங்குவீர்கள். இதனையடுத்து 4 நாட்கள் கழித்து பணம் மீண்டும் வந்துகொண்டே இருக்கும்.

தற்கொலை
இதனை நம்பி நீங்கள் உங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் திரட்டி விளைாட தொடங்குவீர்கள். ஆனால் பணத்தை இழந்துகொண்டே இருப்பீர்கள். மீண்டும் பணத்தை மீண்டுவிடலாம் என்றுதான் உங்களுக்கு தோன்றும். எனவே கடன் வாங்குவீர்கள், வீட்டில் உள்ள நகையை அடகு வைப்பீர்கள் இதெல்லாம் செய்து விளையாடினாலும் பணம் திரும்ப கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். இதன் தொடர்சியாகதான் சிலர் தங்களை தற்கொலை செய்துகொள்கின்றனர்.

சமூக குற்றம்
பலர், இதில் இழந்த பணத்தை மீட்பதற்காக மீண்டும் விளையாட வேண்டும் என்கிற எண்ணத்தில் பணத்தை திருடவும் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள். இதற்கு ஓர் உதாரணம்தான் கடந்த ஏப்ரலில் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம். ஆக இந்த விளையாட்டு தன்னை மட்டும் பாதிக்காமல் தன்னை சுற்றியுள்ள சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை விளையாடுபவர்கள் உணர வேண்டும்.

வெறும் புரோகிராம்
இந்த விளையாட்டு குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில், இது திறமைக்கான விளையாட்டு என பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது திறமைக்கானது அல்ல. மேலும், இதில் எதிரில் விளையாடும் நபர்கள் புரோகிராம் செய்யப்பட்டவர்கள். முதலில் உங்களுக்கு பணம் போனசாக கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யாமலேயே இந்த பணம் கிடைக்கும் என்பதால் இதில் எளிதாக ஜெயித்துவிடலாம் என உங்களுக்கு தோன்றும். இதற்கு காரணம் இந்த போனஸ் பணத்தை கண்டு மூளையில் சுரக்கும் டோபமைன்தான்.

தீர்வு
ஆனால் இந்த பணத்தில் உங்களால் மொத்தத்தையும் எடுத்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுதான் எடுக்க முடியும். இரண்டாவதாக இந்த விளையாட்டில் தோற்றுவிட்டால் வழக்கு தொடரலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், இதிலுள்ள விதிமுறைகளை அவர்கள் சரியாக வாசிப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் இதில் சிக்கிக்கொள்கின்றனர் என்று நிபுணர்கள் விளக்கியுள்ளனர். எப்படியாயினும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்வதுதான் சரியானது .












Click it and Unblock the Notifications