முக்கியம்.. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய பாலிசி.. விரைவில் இறுதி செய்யுமா தமிழக அரசு?
சென்னை: மின்சாரம் மூலம் இயங்கும் 100 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஒப்பந்தம் கோரியுள்ள நிலையில், தமிழக அரசு இதற்கான விதிமுறைகளை விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சாலை போக்குவரத்து அமைப்பு, மின்சாரம் மூலம் இயங்கும் 100 பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னை மாநகர பேருந்து கழகம் சார்பாக இந்த பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் முடிவடைந்துவிட்டது
மேலும் 400 மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், மின்சார போக்குவரத்து வாகனங்களை பதிவு செய்வது குறித்த கொள்கையை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து போக்குவரத்து துறை வட்டாரங்கள் கூறுகையில், ''பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை கோரும் திட்டம் இன்னும் அரசிடம் நிலுவையில் உள்ளது. இருந்தாலும் மின்சாரத்தில் இயங்கும் 100 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த புள்ளிகளை கோருவதற்கான உற்பத்தியாளர்களின் கால அவகாசம் ஜூலை மாத இறுதியில் முடிவடைந்துவிட்டது'' என்றன.

மாநில அரசின் பரிசீலனையில்
இதுதொடர்பாக விருதுநகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டிருந்தார். அதில், ''பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்சார பேருந்துகளுக்கான சுற்றுலா அனுமதி மற்றும் கட்டணம் மற்றும் வரி அமைப்பு குறித்து தகவல்கள் என்ன" என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், ''மின்சார டிரான்ஸ்போர்ட் வாகனங்களுக்கான பதிவு மற்றும் கட்டண விவரங்கள் உள்ளிட்டவை மாநில அரசின் பரிசீலனையில் தான் உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும்
இது தொடர்பாக மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ், பேட்டரியில் இயங்கும் மின்சார டிரான்ஸ்போர்ட் வாகனங்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அரசு எடுத்த முடிவை மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்விவகாரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளை அணுகிய போது, "மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் முன்பாக டிரான்ஸ்போர்ட் வாகனங்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றனர்.

பாலிசி ஏன் அவசியம்?
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை குறைக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழலில் பொதுப்போக்குவரத்து தான் இதற்கு பிரதான தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மின்சார டிரான்ஸ்போர்ட் வாகனங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டால், தனியார் போக்குவரத்து வாகனங்கள் வைத்திருப்பவர்களும் மின்சார வாகனங்களுக்கு மாற வழிவகுக்கும். எனவே, இதற்கான உரிய விதிகளை அரசு வகுக்கும் என்பதே இந்த துறையில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications