என்னாது அதுக்குள்ள விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தலா? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலும் சில மாநிலங்களில் சட்டசபைக்கு இடைத்தேர்தலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிட்டிருந்தது. இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்தது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடந்தது. திமுக எம்எல்ஏ புகழேந்தி இறந்தது சரியாக லோக்சபா தேர்தலுக்கு 13 நாட்களுக்கு முன்பு என்பதால் அந்த தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்த இயலாது என தெரியவந்தது.
இதையடுத்து 543 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் எல்லாமே அறிவிக்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவரும் இந்திய தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்கும் என கூறி வந்தார்.
இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்றைய தினம் நாடு முழுவதும் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் அன்றைய தினமே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்னும் 4 நாளில் வேட்பு மனு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட ஜூன் 14 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளனர். வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன. அதற்குள் எப்படி வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் பிரச்சாரம் செய்வது என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக லோக்சபா தேர்தலும் முதல் கட்டம் என அவசர அவசரமாக நடந்து முடிந்ததாக அரசியல் கட்சிகள் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications