ஆம்ஸ்ட்ராங்னா பயம்..பயத்துல ரோடு ரோடா அலைஞ்சேன்! ஸ்கெட்ச் போட ‘இது’ தான் காரணம்..பொன்னை பாலு பகீர்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதாகி உள்ள பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் ஆற்காடு சுரேஷை கொன்ற பிறகு தன்னையும் கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததாகவும், கொலைக்காக ஆயுதங்களைத் திரட்டி மறைத்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். தொடர்ந்து பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதாகி உள்ள பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொண்ணை பாலு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் வகையில் ரவுடி பொன்னை பாலு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சபதம் எடுத்திருக்கிறார். இதனால் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கு எதிரான கும்பல்களை ஒன்றிணைத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கையும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரௌடி ஜெயபாலையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஆற்காடு சுரேசை கொலை செய்த பிறகு ஆர்ம்ஸ்ட்ராங் தரப்பினர் தன்னையும் கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் பொன்னை பாலு சுற்றி திரிந்ததாகவும், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications