“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், "மின்தடை ஏற்படுவது உண்மைதான். அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை" என மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்படுகின்றன.

நள்ளிரவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு அருகே கரிகாட்டு குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைபோல செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரமாக மின்வெட்டு நீடித்ததால் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர்.
முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகத் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், மின்வாரியத்தைக் கண்டித்து நேற்றிரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னையில் பல்வேறு இடங்களிலும் மின்வெட்டு மக்களை பாடாய்ப்படுத்துகிறது. இரவு நேரம் வந்தாலே மக்கள் மின்வெட்டை நினைத்து பதற்றம் அடையத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் பலருடைய தூக்கம் காணாமல் போய்விட்டது.
இந்நிலையில் மின்வாரியத்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான். அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ தயங்கவில்லை. எனினும், இது மின்சார விநியோகத்தினால் ஏற்படும் பிரச்சனை அல்ல, மின் பகிர்மானத்தால் மட்டுமே இப்பிரச்சனை ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் திடீரென அதிகரிக்கும் மின்சாரத் தேவை, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்படும் கூடுதல் சுமை போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் மட்டுமே இந்தத் தடங்கல் ஏற்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இறுதிப் பயனாளிக்குக் கொண்டு சேர்க்கும் உள்ளூர் உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தமே இதற்குக் காரணம். அனைத்தையும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப் பிரச்சனைகளை சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் பணியாற்றி வருகிறது." எனத் தெரிவித்தார்.
மேலும், "மின்தடை தொடர்பாக முதலமைச்சர் இரண்டு முறை ஆய்வு செய்துள்ளார். துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரும் வாரத்திற்கு 3 முறை ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார் ஜெ.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications