விருத்தாசலத்தில் பிரேமலதா வாங்கிய ஜஸ்ட் பாஸ்! கடைசி நிமிடத்தில் மாறிய தேமுதிக முடிவுகள்
விருத்தாசலம்: தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகுடம் சூடியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்த பதற்றம், கடைசி நிமிடம் வரை நீடித்த நிலையில், இறுதியாக 918 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேமலதா தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதன்முதலில் அரசியல் களம் கண்டு, வெற்றிக் கணக்கைத் தொடங்கிய அதே விருத்தாசலம் மண், இன்று அவரது துணைவியார் பிரேமலதாவையும் கைவிடவில்லை. கடந்த சில தேர்தல்களாக தேமுதிக சந்தித்து வந்த சரிவுகளைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க இந்த வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பிரேமலதாவின் இந்த வெற்றியின் மூலம், விருத்தாசலம் தொகுதி தேமுதிகவின் அசைக்க முடியாத கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
திமுக கூட்டணியின் மெகா வியூகம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கரம் கோர்த்த தேமுதிகவின் முடிவு, ஆரம்பத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் சலசலப்புகள் ஏற்பட்ட போதிலும், "முரசு - சூரியன்" கூட்டணி களத்தில் வலுவாகச் செயல்பட்டதே இந்த வெற்றிக்கு அடிப்படை காரணமாகக் கருதப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ஆட்சிக்கு எதிரான சிறு அதிருப்தி அலைகளைச் சமாளிக்க, தேமுதிகவின் வாக்கு வங்கி திமுகவுக்குப் பக்கபலமாக அமைந்திருப்பதை இந்த ரிசல்ட் உறுதி செய்கிறது.
திக் திக் நிமிடங்கள்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கடும் இழுபறி நீடித்தது. சில சுற்றுகளில் முன்னிலை வகிப்பதும், அடுத்த சுற்றில் பின்னடைவைச் சந்திப்பதுமாக இருந்ததால் விருத்தாசலம் தொகுதி ஒரு போர்க்களமாகவே மாறியது. ஆனால், கிராமப்புற வாக்குகளும், கேப்டன் மீதான மாறாத அபிமானமும் பிரேமலதாவைக் கரை சேர்த்துள்ளது. கிட்டத்தட்ட 1000 வாக்குகள் என்பது குறைவான வித்தியாசமாகத் தோன்றினாலும், மிகக் கடுமையான போட்டியில் ஈட்டிய இந்த வெற்றி தேமுதிக தொண்டர்களுக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
தேமுதிக குஷி
இந்த வெற்றியின் மூலம் சட்டமன்றத்திற்குள் தேமுதிக மீண்டும் தனது குரலை ஒலிக்கச் செய்ய உள்ளது. திமுக வழங்கிய 10 தொகுதிகளில் பிரேமலதாவின் இந்த வெற்றி, அக்கட்சியின் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதோடு, ஒரு மாநிலங்களவை சீட் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலுப்படுத்தும்.
அறிவாலயத்தின் வியூகம் தேமுதிகவுக்குப் புத்துயிர் கொடுத்ததா அல்லது தேமுதிகவின் வருகை திமுகவுக்குப் பலம் சேர்த்ததா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு, "கேப்டன் வழியில் பிரேமலதா" என்ற முழக்கம் இப்போது தமிழக அரசியலில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வெற்றிச் செய்தி வெளியானதும் விருத்தாசலம் முழுவதும் தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். "மறைந்த தலைவரின் ஆசி எங்களுக்கு இருக்கிறது" என உணர்ச்சிப் பொங்கப் பேசும் தொண்டர்களின் உற்சாகம், தேமுதிகவின் அடுத்தகட்டப் பயணத்திற்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications