எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை ரூ.1000 குறைப்பு.. தமிழக அரசு நடத்திய கூட்டத்தில் முடிவு!
சென்னை: எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் விலை ஏற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

எம்.சாண்ட் - பி. சாண்ட்
ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை மலைகளை குடைந்து, பாறைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீடு கட்டவும், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேவைப்படும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை மணலுக்கு பதிலாக கட்டட பணிகளுக்கு, அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மணல் விலை அதிகம் மற்றும் கடுமையான கிராக்கி இருப்பதால் பலரும் எம்.சாண்ட் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிரஷர்களில், எம்.சாண்ட், பி.சாண்ட் கடந்த அதிமுக ஆட்சியில் டெலிவரி விலை, 3,000 ரூபாயாகவும், ஜல்லி, 2,200 ரூபாயாகவும் இருந்தது. அதன்பின், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 1 யூனிட் எம்.சாண்ட், 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல், பி.சாண்ட், 5,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
விலை உயர்வால் அவதி
இந்த திடீர் விலை உயர்வால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிமென்ட் செங்கல், பிளேயர்ஸ் கற்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டுவந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதனால் கன மீட்டருக்கு ராயல்டி இப்போது ரூ.160 ஆக உயர்ந்துவிட்டது.
இதையடுத்து, கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
மீண்டும் விலை உயர்வு
இதனால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. அதன்பேரில் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது. யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான டெவலப்பர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. புதிய வீடுகளை கட்டுபவர்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடு கட்டுவதற்கான செலவு என்பது 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம், வீடு கட்ட திட்டமிட்டிருக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அரசு பேச்சுவார்த்தை
இந்நிலையில், க்ரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எம்.சாண்டு, பி.சாண்டு மற்றும் ஜல்லியின் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் குறைப்பு
அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, எம். சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலை உயர்த்தப்பட்ட ஒரே வாரத்தில் ரூபாய் 1000 அளவுக்கு விலை குறைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications