சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறிப்பதா? மக்களுக்கு பாஜக செய்யும் துரோகம் இது.. காதர் மொகிதீன் ஆக்ரோஷம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் யூனியன் பிரதேசங்களாக உள்ளவை எல்லாம் மாநில அந்தஸ்து கேட்டு கோரிக்கை வைக்கும் காலத்தில் காஷ்மீரும் ஜம்முவும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்படுகிறது என்றால் இது ஜனநாயக படுகொலை இல்லையா? என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Prof K M Kader Mohideen condemns the removal of Article 370

அதில், பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்துள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கியும் அந்த மாநிலத்தை இரு கூறாக்கி, அவற்றை யூனியன் பிரதேசங்கள் என்று அறிவித்தும் முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 05.08.2019 வெளியிட்டிருக்கிறது.

காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மஹ்பூபா முஃப்தி மற்றும் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் எனவும், அவசரகால நிலையை நினைவுபடுத்தும் வகையில் இராணுவக் குவிப்போடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கபட்டிருக்கிறது எனவும் செய்திகள் கூறுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்த நாள், துயரமும், வேதனையும் நிறைந்த கருப்பு தினமாகும். அச்சேதின் (நல்ல நாள்) எனப்பேசி வரும் பிரதமர் மோடி, நாட்டுக்கு-ஜனநாயகத்துக்கு- இந்திய அரசியல் கூட்டத்துக்கு- மாநில உரிமைகளுக்கு- கூட்டுத் கலாச்சாரத்துக்கு புரோதின் (கெட்ட நாள்) ஒன்றை தந்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனத்தில் 370ஆவது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது.

அதேபோல் கிழக்கிந்திய மாநிலங்களான நாகாலாந்து, அஸ்ஸாம், மிஜோரம், மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா என்பன போன்ற மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மாநில சிறப்பு அந்தஸ்தையும் நீக்காத மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மட்டும் நீக்குவது ஏன்? அவர்கள் கூறும் காரணம், தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஓங்கியதால் என்கிறார்கள்.

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் தீவிர லெனிஸ்டுகள், பிரிவினைவாதிகள் என்று பிற மாநிலங்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்களால் நடந்த கொலைகளும், கொள்ளைகளும், அட்டகாசங்களும், அட்டூழியங்களும், கொஞ்சமா? நஞ்சமா? அங்கெல்லாம் சிறப்பு அந்தஸ்து நீக்குவது பற்றி பாரதீய ஜனதா அரசு பேசியது கூட இல்லையே? அது ஏன்? அங்கே முஸ்லிம்கள் இல்லாமல் இருப்பதாலா என்று நியாயவாதிகள் கேட்கின்றனர்.

ஒரு மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் அறிவிப்பை மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று அறிவிக்கும் எந்த ஒரு அரசியல் இயக்கமும் ஏற்காது. காஷ்மீர் மாநிலத்தை இரண்டு துண்டாக்கி, யூனியன் பிரதேசங்கள் ஆக்குவது எதனால்? காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து நேரத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதிமொழிக்கு இது மாற்றமானது அல்லவா? காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை ஒப்புக்கொள்ளாத எந்த ஒரு மாற்றத்தையும் இந்திய அரசு செல்லக்கூடாது என்று 370ஆவது பிரிவு சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு போக முடியும்? ஏன், சர்வதேச கோர்ட்டுக்கு கூட செல்ல முடியும்?யூனியன் பிரதேசங்கள் ஆக உள்ளவை எல்லாம் மாநில அந்தஸ்து கேட்டுக் கோரிக்கை வைக்கும் இக்காலத்தில் காஷ்மீரும், ஜம்முவும் யூனியன் பிரதேசங்களாக்கப்படுகின்றன என்றால், இது ஜனநாயகப் படுகொலை இல்லையா?

இந்திய இறையாண்மையை ஏற்று 70 ஆண்டு காலமாக, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு, பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் பங்கு பெற்று, தங்களை இந்தியர்கள் எனவும், இந்திய கூட்டு கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் எனவும் பிரகடனப்படுத்திய மக்கள் மத்திய அரசு அவமானப்படுத்தி, அச்சுறுத்தி அவர்களின் அமைதியான வாழ்வை கெடுத்து நாசமாக்கி மிகப்பெரிய இமாலயத் தவறை செய்திருக்கிறது.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மத்திய அரசு, நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல எத்தனித்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது; வன்மையான கண்டனத்திற்குரியது. சர்வாதிகாரம் நீடித்த வரலாறு இந்திய நாட்டில் இல்லை.

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் காஷ்மீரில், மத்திய அரசு, நரகத்தின் வாயில்களைத் திறந்து விட்டிருக்கிறது. விரைவில், சுவன பூமியாக மாறும் எனவும், ஜனநாயக சக்திகள் நரகத்தை மூடி, சொர்க்க பூங்காவை பாதுகாக்கும் என்றும் நம்புவோம், என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
,

English summary
Prof K M Kader Mohideen condemns the removal of Article 370 in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X