சொத்து பத்திரத்தை மாவட்ட பதிவாளர்கள் தணிக்கை செய்ய தடை? 15 பதிவு மாவட்டங்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
சென்னை: நிர்வாக பணியிலுள்ள மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்தில் பதிவான பத்திரங்கள் மீதான தணிக்கையில் ஈடுபட தடை விதித்து ஏற்கனவே பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டிருந்த நிலையில், 15 பதிவு மாவட்டங்களில், சிறப்பு தணிக்கை நடத்த, மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார் ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். சார் பதிவாளர் அலுவலகங்களில் என்ன நடக்கிறது? பதிவுத்துறை ஐஜி பிறப்பித்த உத்தரவுக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், நிர்வாக பணிக்காக, மாவட்ட பதிவாளர் ஒருவர் உதவி ஐஜி நிலையில் நியமிக்கப்படுகிறார். மேலும், தணிக்கை பணிக்கென்று, ஒவ்வொரு பதிவு மாவட்டத்துக்கும், ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் நியமிக்கப்படுகிறார்.

புதிய மனைப்பிரிவுகள் நிர்வாக பணிக்கான மாவட்ட பதிவாளர்கள், புதிய மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள்.. ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவாகும், அனைத்து பத்திரங்களையும் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், ஆய்வு செய்ய வேண்டும். பதிவாகும் பத்திரங்களில், வருவாய் இழப்பு போன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்
ஆனால், சில இடங்களில் தணிக்கை மாவட்ட பதிவாளர் இடம் காலியாக இருப்பதால், நிர்வாக மாவட்ட பதிவாளரே தணிக்கை செய்துவிடுகிறார்கள்.. அதேபோல, தணிக்கை மாவட்ட பதிவாளர்களே, நிர்வாக பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மறைக்கப்படும் முறைகேடுகள்: இப்படி ஒரே நபர் 2 நிலைகளில் செயல்படும்போது, ஏராளமான முறைகேடுகள் மறைக்கப்படுவதும், லஞ்ச வசூலும் நடமாடுவதாக பதிவுத்துறைக்கு புகார்கள் சென்றன. எனவே, இதனை தடுக்க, கடந்த மே 2ம் தேதியன்று, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்..
அதில், "நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்துக்கு உட்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவான பத்திரங்களை தணிக்கை செய்வதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் பணியிடம் காலியானால், வேறு மாவட்டத்தில் உள்ள, மாவட்ட பதிவாளரை தான், அங்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
டிஐஜிக்கள் உத்தரவு
தற்போது, நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்தில் தணிக்கை பணிக்கு, கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே பகுதியில் தணிக்கையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது.
இதுதொடர்பான உத்தரவுகளை, டிஐஜிக்கள் பிறப்பிக்கவும் கூடாது" என்று தெரிவித்திருந்தார். நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், பத்திரங்களை தணிக்கை செய்ய பதிவுத்துறை தடை விதித்த நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மீண்டும் ஒரு உத்தரவினை பிறப்பித்திருக்கிறார்.
15 பதிவு மாவட்டங்கள்
அதில், டிஐஜிக்கள் அனுப்பிய விசாரணை அறிக்கை அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, கடலுார், மதுரை ஆகிய ஆறு மண்டலங்களில், தேர்வு செய்யப்பட்ட 15 பதிவு மாவட்டங்களில், சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். யார் எந்த பதிவு மாவட்டத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், 2023 முதல், 2025 மே வரையிலான காலத்தில், அந்தந்த பதிவு மாவட்டங்களில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவான பத்திரங்களை முழுமையாக சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும்.
அதுவும் முதலில், 2024 ஏப்ரல் முதல், 2025 ஏப்ரல் வரையிலான காலத்தில் பதிவான பத்திரங்களை, சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும். இது தொடர்பான வாராந்திர அறிக்கையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை, 11:00 மணிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications