புறம்போக்கு, ஹைவேயில் திமுக கொடிக் கம்பங்கள்.. உடனே தூக்குங்க! உடன்பிறப்புகளுக்கு துரைமுருகன் ஆர்டர்
சென்னை: அரசு நிலம், புறம்போக்கு நிலம், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுகவின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதே போல மதுரை, பைபாஸ்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆஜராகி தமிழகத்தில் கொடி கம்பம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து 114 வழக்குகள் பதிவாகியுள்ளன" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளந்திரையன், "பொது இடங்களில் கட்சி இயக்கம் மதம் சாதிய சம்பந்தமான கட்சி கொடிகளை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோதல் ஏற்படுகிறது இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும் விபத்தும் ஏற்படுகிறது இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடுவதில் நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். மேலும் எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது" என உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்யப்பட்ட போதும், இரு நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவினை உறுதி செய்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்." என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் -பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்களை 'மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் - அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications