பூதாகரமாகும் புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்... வசமாக மாட்டப் போகும் மாஜி முதல்வர் ஓ.பி.எஸ்.
சென்னை: சென்னை புளிந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா (கே.பி.பார்க்) பகுதியில் தமிழக அரசால் ஏற்கனவே கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்திருந்தன. இதனால் அந்த வீடுகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ250 கோடியில் 1,900 வீடுகள் கட்டுவது என்பது திட்டம்.
இதில் முதல் கட்டமாக ரூ112 கோடி மதிப்பீட்டில் 864 வீடுகள் கட்டப்பட்டு 2019-ல் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் குடியிருப்புகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் இந்த வீடுகள் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டாகவும் செயல்பட்டது.

தரமற்ற கட்டுமானம்
பின்னர் குடியிருப்புகளை ஒதுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து கடந்த ஆண்டு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போதைய நிலையில் 100 குடும்பங்கள் இந்த குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இக்குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

எம்.எல்.ஏ. ஆய்வு
இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் இந்த குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் உடன் சென்றனர். இந்த ஆய்வின் போதுதான் ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்பும் மிக மோசமாக தரமற்ற முறையில் கட்டப்பட்டது பகிரங்கமானது. மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதும் குடிநீர் குழாய் இணைப்புகள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த குடியிருப்புகளை கட்டிய PST Engineering Construction நிறுவனம் உடனடியாக மராமத்து பணிகளை அவசரம் அவசரமாக மேற்கொண்டது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் இந்த குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.

சென்னை ஐஐடி குழு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், குடியிருப்புகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி. வல்லுநர் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், குடியிருப்பு பழுதுகளை சரி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடியிருப்புகள் நிலைத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே மக்கள் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். இல்லை எனில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்து இப்படியான மோசமான குடியிருப்புகள் கட்டியவர்கள், அதற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கமல் காட்டம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.

ஓபிஎஸ் மீது நடவடிக்கை தேவை
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், புளியந்தோப்பு பன்னடுக்குகட்டடம் தரமற்று கட்டப்பட்டது பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். அப்போதைய துறை அமைச்சர் (ஓ.பன்னீர்செல்வம்) மீது விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.

உண்மை நிலை என்ன? -விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில், அமைச்சர்கள் கருத்து ஒன்றாகவும்,குடியிருப்பு வாசிகளின் கருத்து வேறுமாதிரியும் உள்ளதால், உண்மை நிலையை கண்டறிய தமிழகஅரசு சிறப்புகுழு ஒன்றை அமைத்து குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பாக வாழவழிவகை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

கொந்தளிக்கும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிகமோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப்பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. ஒரு வீட்டிற்கு 15 இலட்சம் வீதமென செலவினத்தை மதிப்பிட்டுவிட்டு, தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும், கட்டிடத்தின் தரத்தைக்கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரகதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016 ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல ஒரு கோரவிபத்து நிகழ்ந்துவிடக்கூடாது என வலியுறுத்தி இருக்கிறார்.

பரந்தாமன் எம்.எல்.ஏ. தீர்மானம்
இதனிடையே தமிழக சட்டசபையில் இன்று எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் புளியந்தோப்பு குடியிருப்புகள் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இந்த கட்டிடம் 2018 இல் தொடங்கப்பட்டு 2019-ல் முடிக்கப்பட்டது. தொட்டால் சினிங்கி பார்த்திருக்கிறோம் ஆனால் தொட்டாலே விழுகின்ற கட்டிடத்தை கண்டுபிடித்த ஆட்சி, அதிமுக ஆட்சி... கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி. அந்த ஆட்சியில் கட்டி முடித்த அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகளை சென்னை ஐ.ஐ.டி. வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்கிறது.

பொதுமக்கள் மீது புகார் சொன்ன கட்டுமான நிறுவனம்
மக்களின் உயிருக்கு உலை வைக்கக் கூடிய இந்த கட்டிடத்தைக் கட்டிய PST Engineering Construction இப்போது பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படவில்லை என்றும் அதன் காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வருகின்றன. இந்த தகவலால் எங்கள் நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதில் துளியும் உண்மை இல்லை எங்கள் நிறுவனத்தால் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானங்களை குடிசை வாழ் மக்களுக்கு 2 ஆண்டுகளாக ஒதுக்காமல் கொரோனா வார்டாக பயன்படுத்தினர். பல்வேறு இயந்திரங்கள், தளவாடங்கள் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டதால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படாததால் பொதுமக்கள் குடியிருப்புகளில் புகுந்து பல பொருட்களை திருடியும் சேதப்படுத்தியும் உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்திருக்கிறது. அதாவது பொதுமக்கள்தான் காரணம் என பழிபோடுகிறது கட்டுமான நிறுவனம்.

ஓபிஎஸ் சிக்கப் போகிறார்?
தற்போதைய நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் ஓயாது என்றே தெரிகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த விவகாரம் மிக கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்கிறது. தமிழக அரசு குடியிருப்புகளை மராமத்து பணி செய்யாமல் நடவடிக்கை எனும் சாட்டையை சுழற்றினால் ஓ.பி.எஸ். என்கிற ஓ.பன்னீர்செல்வம் என்கிற விக்கெட் வீழ்த்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications