மகாளய அமாவாசை.. நவராத்திரி.. சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன வனத்துறை
சென்னை: புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாட்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மழை காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள்.

புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 15ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமாவாசைக்கு மறுநாள் முதல் நவராத்திரி பூஜை தொடங்க உள்ளது.
சதுரகிரி கோவிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கியமான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையினர் வருகிற நவராத்திரி பண்டிகையின் இறுதி நாட்களான 22 முதல் 24ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளனர்.
அன்றைய நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் கோவிலில் தங்க அனுமதி அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications