அடாது பெய்த மழையால் விடுமுறை..விடாது நடந்த பிளஸ் 2 துணை தேர்வு..எத்தனை பேர் எழுதினார்கள்?
சென்னை: கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வி தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மழையை பொருட்படுத்தாமல் துணை தேர்வுக்கு விண்ணப்பிட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி - கிண்டி சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

வெள்ளநீர் தேங்கியதன் காரணமாக கத்திப்பாரா சுங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 துணை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு பள்ளி தேர்வுகள் துறை அறிவித்துள்ளளது.
ஜூன் 19 முதல் 26 வரை பிளஸ் 2 துணை தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய பெய்து வரும் தொடர்மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் பிளஸ் 2 துணை தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
கனமழையால் சென்னைக்கு வரும் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. துபாய், தோகா, சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 17 பன்னாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதனிடையே இன்று தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் இன்று தேர்வுகளை எழுதியுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் 56 ஆயிரம் பேர் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று திங்கட்கிழமை தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது. தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மழை நீடித்த நிலையிலும்அதனை பொருட்படுத்தாமல் துணை தேர்வு எழுதியுள்ளனர் மாணவ மாணவிகள். 6 மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத மையங்களுக்கு வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications