சின்ன சின்ன தூறல் என்ன.. ரசிக்க மட்டுமா மழை.. உயிர்த் துளிகளை சேமிக்கவும்!
Recommended Video
சென்னை: இதோ இன்னும் ஒரு மழைக்காலம்.. விடிய விடிய மழை.. இதமாக, மெதுவாக, மனம் குளிர.
முன்பெல்லாம் மழை வந்தால் அதை ரசித்தோம்.. நனைந்து விளையாடினோம்.. கப்பல் விட்டு மகிழ்ந்தோம்.. சொட்டும் துளிகளை கையில் பிடித்து தட்டி விட்டோம்.
இன்றோ மழைநீரை சேமிக்க குடங்களைத் தேடுகிறோம். காரணம் எங்கெங்கும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம். பெய்யும் மழையே எங்களுடன் எப்போதும் இரு என்று பிரார்த்திக்கிறோம்.

போதாது இந்த மழை
விடிய விடிய மழை பெய்த போதும் சென்னை காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது. தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைந்த நம் மக்கள் வடகிழக்குப் பருவமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரவேற்போம் வான் மழையை
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நீரின் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். மழையை மக்கள் வரவேற்கின்றனர். இந்த வருடம் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் மழைநீரின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

தண்ணீர் கண்ட ஆனந்தம்
இராமநாதபுரம்,கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. மழையைக் கண்டாலே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழைப் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

சேமிப்போம் தண்ணீரை
நேற்றிரவு முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்கிறது. இந்த மழை நீரை மக்கள் பெரிய பெரிய கேன்கள் குடங்கள் போன்றவற்றில் சேமித்தால் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும். ஏரி,குளங்களில் மழைநீரைச் சேமிக்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமிக்க வேண்டும்.

பிடித்து வையுங்கள்
வீட்டில் உள்ள குடங்களில் தண்ணீர் பிடித்து மூடி வைக்க வேண்டும்.மழையால் இங்கு சென்னை போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அவ்வாறு செய்தால் நிச்சயமாக அடுத்த வருடம் தண்ணீர் பிரச்சினை இருக்காது.

அடடா மழைடா.. எடுடா குடத்தை
தண்ணீரைச் சேமிக்க சரியான தருணம் இது. அடடா மழைடா அடைமழைடா என்று பாடிய காலம் போய் அப்பாடா மழை வந்துவிட்டது எடு குடத்தை என்ற காலத்தில் இருக்கிறோம்.
- ஜி. உமா












Click it and Unblock the Notifications