ராஜேந்திரபாலாஜி அதிமுகவில்தான் நீடிப்பார்... அவரைப்பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் - இபிஎஸ்
ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ராஜேந்திரபாலாஜி ஒருபோதும் பாஜகவில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் அதிமுகவில்தான் நீடிப்பார் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான் என்றார்.
அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? நீட் தேர்வை ஏன் இதுவரை ரத்து செய்யவில்லை. சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
தொடர்ந்து பேசிய அவரிடம் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே? அதற்காக தான் அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திரபாலாஜி சொந்த வேலைக்காக டெல்லி சென்றுள்ளார். அவர் குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார்.
ராஜேந்திரபாலாஜி ஒருபோதும் பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் தான் உள்ளார். இனியும் அவர் அதிமுகவில்தான் நீடிப்பார் என்றும் கூறினார்.
கூட்டணி கட்சித்தலைவர்களை சந்திப்பது சாதாரணமான நிகழ்வுதான் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இனியும் ராஜேந்திரபாலாஜி பற்றி அவதூறு வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றார். மாற்றுக்கட்சியிலிருந்து ஒருவர் இணையும் போது வரவேற்கிறோம் என்பது இயல்பான விசயம்தான் என்றும் கூறினார்.
அதிமுக புதிய அவைத்தலைவர் பற்றிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து கட்சித்தலைமை முடிவு செய்யும் என்று கூறினார். பெகாசஸ் விவகாரம் உண்மை நிலை குறித்து தெரியாமல் கருத்து சொல்ல முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிமுக கட்சியில் இருந்து கொண்டு பாஜவுக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர்களில் முதலிடத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார்.
ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சொத்து குவிப்புக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் 2 நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு காரணமாக, மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததுடன் வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டார். மேலும் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையும் துவங்கியுள்ளது. இந்தநிலையில் அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. இதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜேந்திர பாலாஜி சொந்த வேலை காரணமாகத்தான் டெல்லி சென்றுள்ளார் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications