எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அனைத்தையும் இழந்து சென்னை ராயப்பேட்டையின் புதிய இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி குடிபெயர்ந்துள்ள சூழலில், அதிமுகவில் இன்னும் உட்கட்சி பூசல் ஓயவில்லை. தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இருவரும் இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய முடிவெடுத்துவிட்டதாகத் ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன. உட்கட்சி மோதல்களின் போது தாங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதை அவர் நிச்சயம் மறக்க மாட்டார் என்றும், எதிர்காலத்தில் தங்களை பழிவாங்குவார் என்றும் விஜயபாஸ்கர் பயப்படுகிறார்.

எடப்பாடியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்குப் பலியாவதை விட, வளர்ந்து வரும் மாற்று சக்தியான தவெக-வில் இணைந்து கொள்வதே அரசியல் எதிர்காலத்திற்கும், தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் பாதுகாப்பானது என விஜயபாஸ்கர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி இருவரிடமும் தொலைபேசியிலும் நேரடியாகவும் பலமுறை பேசி சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
"கட்சியை விட்டுப் போகாதீர்கள்.. பேசி சரிசெய்து விடலாம்" என்று எஸ்பி வேலுமணி பேசிய போதும் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனத் தெரிகிறது. விஜயபாஸ்கர் தவெகவை நோக்கித் தாவத் தயாராகிவிட்ட நிலையில், வடதமிழகத்தின் அதிமுக முகமான சி.வி. சண்முகத்தின் நிலைப்பாடு வேறு மாதிரியாக உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சி.வி. சண்முகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிருப்தி உள்ளது உண்மைதான். ஆனால், விஜயபாஸ்கரைப் போல தவெக-விலோ அல்லது திமுக-விலோ இணைய அவர் விரும்பவில்லை. எடப்பாடியின் தலைமையின் கீழ் தொடரவும் பிடிக்காமல், பிற கட்சிகளுக்குச் செல்லவும் மனமில்லாமல், அரசியலை விட்டே தற்காலிகமாக ஒதுங்கிவிடலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு அதிமுக சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க, தற்போது விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் தவெக-வுக்கு மாறுவதும், சி.வி. சண்முகம் போன்ற அதிரடித் தலைவர்கள் அரசியலை விட்டு விலக நினைப்பதும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தலைமைத்துவம் குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
அதிமுகவின் சரிவை முதலமைச்சர் விஜய் தனது தவெக-வின் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி விழித்து கொள்வாரா என்பதே அதிமுகவினரின் குமுறலாக உள்ளது. அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் வரும் சூழலில், தவெக தீவிரமாக தயாராகி வருவது கண்கூடாக தெரிகிறது. இதற்கு அதிமுகவால் ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
