என்ன இப்படி சொல்லிட்டாங்க.. ரஜினிகாந்த் கட்சியின் பெயரில் எது கண்டிப்பாக இடம் பெறும்? பதிலை பாருங்க
சென்னை: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவது ஊரறிந்த விஷயம். அப்படி அவர் ஆரம்பிக்கும் கட்சியின் பெயரில் எது கண்டிப்பாக இடம் பெறும் என்று சுவாரஸ்யமான கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இடம் பெற்ற நான்கு பதில்களில் பெரும்பாலானோர் தேர்வு செய்தது "அவரை முதலில் பெயரு வைக்க விடுங்கயா என்பதாக இருந்தது.
1996ல் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் பேச்சை தொடங்கினார். அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அரசியலுக்கு வராத ரஜினி, திமுக மற்றும் தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.
அதன்பிறகு ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல் வரும் போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வரும். ஆனால் அவர் அரசியல் குறித்து ஒரு முறை கூட அறிவிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ரஜினிகாந்த் முதல்முறையாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறித்து பேசினார். ஆனால் பேசிய படி அரசியலுக்கு வரவில்லை.
திமுக, அதிமுகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்கமாட்டார்- 'சூப்பர்வைசர்' தமிழருவி மணியன் திட்டவட்டம்

வரிசையாக படங்கள்
படங்களில் அதிக அளவு நடிக்க தொடங்கினார். காபாலி, காலா, பேட்ட, தர்பார் என அடுத்தடுத்து படங்கள் வந்தன. இதற்கிடையே சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

அதிசயம் நிகழும்
ரஜினிகாந்த் வெளியிட்ட ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியிருந்தார்.

ஆட்சி மாற்றம் நடக்கும்
அதன்பிறகு போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, என் உயிர் மக்களுக்காக போனால் பரவாயில்லை. சொன்னபடி நிச்சயம் அரசியலுக்கு வருவேன். மாத்துவோம் எல்லாவற்றையும். ஆட்சி மாற்றம் அரங்கேறும் என்று ஆவேசத்துடன் பேசினார். அத்துடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவில் இருந்த அர்ஜூன் மூர்த்தியை நியமித்தார். மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்தார்.

எடப்பாடியார் கருத்து
தற்போது ரஜினி கட்சியின் பெயர், சின்னம், கொள்கை, அரசியல் கட்சிக்கு விண்ணப்பிப்பது, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பல்வேறு விவகாரங்களை தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஆனால் ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சீரியஸாக பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி குறித்த கேள்விக்கு முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அப்புறம் அதை பற்றி பேசலாம் என்றார். இதே கருத்தை தான் திமுக தலைவர் முக ஸ்டாலினும் இன்று தெரிவித்தார்.

அரசியல் பிரவேசம்
அண்மையில் நாம் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று போலில் கேட்டிருந்தோம். அதற்கு கிட்டத்தட்ட 57.85 சதவீதம் பேர் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே கூறினார்கள். நிச்சயம் ஏற்படும் என்று 22.86 சதவீதம் பேர் கூறியிருந்தார்கள். இதேபோல் இன்னொரு சர்வேயில் பலர், ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக ரஜினி அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக கூறியிருந்தார்கள்.

என்ன சர்வே அது
இந்நிலையில் தற்போது நம்முடைய ஒன் இந்தியா தமிழ் தளத்தில் ரஜினிகாந்த் கட்சியின் பெயரில் எது கண்டிப்பாக இடம் பெறும் என்று சுவராஸ்மான போல் ஒன்றை நடத்தியிருந்தோம். அதற்கு கழகம், தேசிய, ஆன்மீகம், அவரை பேரு வைக்க விடுங்கயா! என நான்கு பதில் கொடுத்திருந்தோம். இந்த போலில் மொத்தம் 6897 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 44.82 சதவீதம் பேர் அவரை பேரு வைக்க விடுங்கயா! என்று கூறியுள்ளனர்.

தேசிய
அதேநேரம் ஆன்மீகம் என்ற வார்த்தை இடம் பெறும் என்று 37.05 சதவீதம் பேரும், தேசிய என்ற வார்த்தை இடம் பெறும் என்று 13.35 சதவீதம் பேரும், கழகம் என்ற பெயர் இடம் பெறும் என 4.78 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

ஏன் அப்படி
முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை பேச மறுக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பலர், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு பேசுவோம் என்று கூறி வருகிறார்கள். இந்த சூழலில் பெரும்பாலானோர் ரஜினியை பெயர் வைக்க விடுங்க என்று போலில் கூறியிருப்பதன் மூலம் அவரது அரசியல் வருகை உறுதி என்பது குறித்து போதிய நம்பிக்கை மக்களிடம் இன்னும உருவாகவில்லையோ என்று தோன்றுகிறது.