ரஜினி ரசிகர் மன்ற மாஜி நிர்வாகிக்கு ஜாக்பாட்! திமுகவில் தேடி வரும் மாவட்டச் செயலாளர் பதவி!
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியான பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகனுக்கு திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி தேடி வந்துள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கட்சித் தலைமையின் பரிபூரண ஆசியுடன் வேட்பு மனு அளித்திருக்கிறார் மதியழகன்.
மதியழகன் மாவட்டச் செயலாளர் ஆவதன் மூலம் ஏற்கனவே அந்தப் பதவியில் இருக்கும் செங்குட்டுவனுக்கு கட்டாய ஓய்வு வழங்குகிறது திமுக தலைமை.

கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் இடையே எல்லை மாவட்டமாக அமைந்துள்ள கிருஷ்ணகிரியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கட்சித் தலைமையால் ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிறுத்தப்படுகிறார். செங்குட்டுவன் செயல்பாடு திருப்தி அளிக்காததால் அவரது இடத்திற்கு இவரை கொண்டு வர விரும்புகிறார் ஸ்டாலின்.

விருப்ப மனு
இதனால் தான் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி சகிதமாக அண்ணா அறிவாயலத்துக்கு சென்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு விருப்பமனு கொடுத்திருக்கிறார். இதன் மூலம் இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவது உறுதியாகிவிட்டது. இதனிடையே கடந்த ஒன்றாம் தேதி மதியழகன் எம்.எல்.ஏ.இல்ல மண விழாவை கோவையில் நடத்தி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், '' மதியழகனை திமுகவில் சேர்த்ததால் இந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய பெருமை வந்து சேர்ந்திருக்கிறது'' மனதார பாராட்டினார்.

ஸ்டாலின் நன்மதிப்பு
இதன் மூலம் மதியழகன் மீது முதல்வர் ஸ்டாலின் எந்தளவு நன்மதிப்பு வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனிடையே மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைக்க முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு இந்த முறை கடும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக தளி பிரகாஷ் எம்.எல்.ஏ.வே தொடருவார் என்பது கவனிக்கத்தக்கது.

கிருஷ்ணகிரி திமுகவினர்
இதனிடையே மருமகள் வந்த நேரம் மாமனாருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கட்சியில் தேடி வருகிறது என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினர் உற்சாகம் பொங்க பேசி வருகிறார்கள். பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் மகனுக்கும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்திக்கும் கடந்த ஒன்றாம் தேதி தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications