அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி அளிக்கப்படுமா? ஒரு வார்த்தையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக விரைவில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும் என்று கூறியுள்ள ராமதாஸ், பாமகவில் நிலவி வரும் எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணியை பதவி நீக்கம் செய்து, அவரை செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதுமட்டுமல்லாமல் அன்புமணி அவரின் தாயையே பாட்டிலை எடுத்து வீசி அடிக்க முயற்சித்தார் என்றும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சென்னையில் ராமதாஸ்
இதன்பின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் மேற்கொள்ள நிர்வாகிகள் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று திடீரென ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்.
ராமதாஸ் பேட்டி
சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு ராமதாஸ் வந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர்.. அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன்.. அதனால் குருமூர்த்தி தைலாபுரம் வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. தாய் மீது பாசம் கொண்டவன் என்று அன்புமணி பேசியதற்கு பதில் கூற முடியாது.
பாஜக கூட்டணி?
பாஜக கூட்டணியில் இருந்து மீண்டும் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. இனி எல்லாம் நல்லதாக நடக்கும் என்று பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சொல்லி கொள்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம்.
அன்புமணிக்கு தலைவர் பதவி அளிக்கப்படுமா?
பாமகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு எட்டப்படும். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உள்ளது. கூட்டணி பேசுவதற்கான, முடிவு செய்வதற்கான காரணம் இது அல்ல. கூட்டணியை தனித்து முடிவு செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து முடிவு செய்வோம். முகுந்தன் விவகாரம் முடிந்துபோன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களை பேசுவோம் என்று தெரிவித்தார். மேலும், அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, பேசுவோம் என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications