விஜய்யின் தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையா? ராமதாஸ் கொடுத்த பரபர விளக்கம்!
சென்னை: "விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையா?" என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளன. திமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் இருந்த கூட்டணி பிசிறு இல்லாமல் அப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பாஜகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிக ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைத்து வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் விஜய் முன்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் எனப் பேசப்பட்டது. ஆனால், அக்கட்சி தற்போது பாஜகவுடன் இணைந்துள்ள நிலையில், புதிய கூட்டணியை விஜய் அமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தனித்துக் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வேறு சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, "அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை" டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூட்டணி பேச்சு குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மேலும், "2026 தேர்தல் வரை பா.ம.க-வின் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், 2026 தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் அன்புமணி வாரிக்கொண்டு செல்லட்டும். பாமக-வில் கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். எதிர்காலத்தில் த.வெ.க-வுடன் பேசுவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
இப்போதைக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும், இன்னும் சில மாதங்களில் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தவெகவில் புதிதாக நிர்வாகிகள் நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, அக்கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இறங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications