ராமராஜன் மேலூரில் சர்ப்ரைஸ்! ஆலங்குளம் விபின் பின்னாடி இப்படியொரு காரணமா? கசிந்த சாமானியன் ரகசியம்
சென்னை: தமிழக அரசியலில் 'மக்கள் நாயகன்' என்று அழைக்கப்படும் ராமராஜன், மீண்டும் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நீண்டகாலமாக அதிமுகவின் அடையாளமாகத் திகழ்ந்தவர், இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் சுவாரஸ்யமான பின்னணியும் தற்போது வெளியாகி வியப்படைய வைத்து உள்ளது. என்ன நடக்கிறது ஆலங்குளம் தொகுதியில்?
1980-களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ராமராஜன்.. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மிக மிக தீவிரமான விசுவாசி... சினிமா மட்டுமின்றி அரசியலிலும் அவர் அதிமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார். அதிலும் தன்னுடைய சில பாடல்களில் அப்பட்டமாகவே அதிமுகவை குறியீட்டை அதிகமாகவே வெளிப்படுத்தினார்..

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்தார்.. 1998-ம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதற்கு பிறகும்கூட பல ஆண்டுகளாக அதிமுகவின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த பெருமை ராமராஜனுக்கு உண்டு.
அதிமுகவில் இருந்துட்டே
ஆனால், அண்மைக்காலமாக அ.தி.மு.க தலைமை அவரைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்ற ஒரு வருத்தம் அவர் தரப்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக ராமராஜன் பிரசாரம் செய்கிறார். இதற்குப் பின்னால் ஒரு சினிமா பாசமும் ஒளிந்துள்ளது.
அதாவது விபினின் அப்பா வைகுண்டராஜா, ராமராஜனின் தீவிர ரசிகராம். கடந்த ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான 'சாமானியன்' திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தபோது, அதைத் தனது தியேட்டர்களில் நீண்ட நாட்கள் திரையிட்டு ஓட்டி வைகுண்டராஜா ஆதரவு அளித்தார்...
தனக்கு அப்படியொரு சிரமமான காலத்தில் உதவியவர்களுக்குக் கைமாறு செய்யவே இப்போது ராமராஜன் தவெகவுக்கு ஆதரவாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளாராம்.. இது ஒரு தனிப்பட்ட நட்பின் வெளிப்பாடாகத் தெரிந்தாலும், அரசியலில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக ஓட்டு பாதிப்பு ஏற்படுமா?
ராமராஜன் இப்போதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவே நீடிக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், அவர் மாற்று முகாமிற்குச் சென்றிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பழைய தலைமுறை வாக்காளர்கள் மத்தியிலும், தென் மாவட்டங்களிலும் ராமராஜனுக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ராமராஜனை இன்றும் ஒரு பிரதிநிதியாகவே பார்க்கிறார்கள். இதனால், ஆலங்குளம் போன்ற தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு சிறு சரிவை ராமராஜன் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தவெகவுக்கு பெரிய பிளஸ்
த.வெ.க போன்ற வளர்ந்து வரும் கட்சிகளுக்கு ராமராஜன் போன்ற அனுபவமிக்கவர்களின் வருகை கூடுதல் பலத்தைக் கொடுக்கும். விஜய்யின் ரசிகர் மன்றப் பலத்துடன், ராமராஜனின் பழைய கால செல்வாக்கும் சேரும்போது, அது நடுநிலை வாக்காளர்களைக் கவர உதவும். வெறும் கைமாறுக்காக மட்டும் அவர் வரவில்லை, மாறாகத் தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற கோபத்தை வெளிப்படுத்தவும் இந்தத் தேர்தல் களத்தை அவர் பயன்படுத்துகிறார்.
மொத்தத்தில், ராமராஜனின் இந்த அரசியல் நகர்வு ஒருபுறம் நன்றிக்கடனாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இது அதிமுக தலைமைக்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது. ஆலங்குளம் தேர்தல் முடிவுகள், இந்த நட்சத்திரப் பிரசாரத்தின் உண்மையான பலனை உணர்த்தும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications