ரம்ஜான் லீவுக்கு ஊருக்கு போறீங்களா.. சென்னை டூ பெங்களூர், திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்! ரயில்வே
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பெங்களூர், கன்னியாக்குமரி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனால், விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ரயில்களில் 60 நாட்கள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் முன்கூட்டியே பயணிகள் முன்பதிவு செய்து கொள்கிறார்கள்.

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு ரயில்
இதனால், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. பேருந்துகளில் சென்றால் கட்டணம் அதிகம் என்பதோடு, பயண களைப்பு, கூடுதல் நேரம் ஆகும் என்பதால் பெரும்பலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். தனியார் ஆம்னி பேருந்துகளிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். இதனால் பயணிகள் ரயில்களில் செல்லவே விருப்பப் படுகிறார்கள்.
ரயில்களில் டாய்லட் வசதி, படுக்கை வசதி உள்ளிட்டவை இருப்பதால் வயதான மற்றும் குழந்தைகளுடன் செல்லும் பயணிகளுக்கு ஏற்ற போக்குவரத்து அமைப்பாக உள்ளது. இதனால், சாதாரண விடுமுறை நாட்களிலேயே பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தாம்பரம், கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தாம்பரம் டூ கன்னியாகுமரி சிறப்பு ரயில்
புனித பண்டிகையான ரமலானை இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் வரும் 31-ந் தேதி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்கான ரெயில் முன்பதிவு கடந்த மாதமே முடிந்து விட்டது. இந்நிலையில் சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
* தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்; (வண்டி எண்; 06037 ) தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு மார்ச் 31 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வரும்.
* தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
தாம்பரம் டூ திருச்சி சிறப்பு ரயில்
* அதேபோல தாம்பரம் - திருச்சி இடையே, மார்ச் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். அதேபோல மறுமார்க்கத்தில் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 12.30 மணிக்கு வந்து சேரும்.
* தஞ்சை, பாநபாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்தூர், புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையஙக்ளில் இந்த ரயில் நின்று செல்லும்.
சென்ட்ரல் டூ பெங்களூருக்கு சிறப்பு ரயில்
* அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07319), அதேநாளில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து அதே நாளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10.50 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
* இந்த ரயில் கே.எஸ்.ஆர் பெங்களூர், யெஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்கராபேட், ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோழிங்குர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.












Click it and Unblock the Notifications