சொத்து பத்திரப்பதிவு.. வில்லங்க சான்றிதழ் செய்றீங்களா? தமிழக அரசின் அதிரடி.. சபாஷ் "நம்பிக்கை இணையம்"
சென்னை: பத்திரப்பதிவு துறையில் அடுத்தடுத்த அதிரடிகளை தமிழக அரசு செய்து வரும்நிலையில், இன்னொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திஉள்ளது.
பலகாலமாக உயர்த்தப்படாத கட்டண உயர்வு பத்திரப்பதிவு துறையில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.. ஆனால், இந்த கட்டண உயர்வானது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது...

கட்டண உயர்வு: இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில், "ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு, சில நாட்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.. இதுதொடர்பாக, பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
அறிக்கை வெளியீடு: அந்த அறிக்கையில், "தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் இப்போது, 'ஸ்டார் 3.0' மென்பொருள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு, 'மிஷின் லேர்னிங்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் வகையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் தயாரிக்கப்படும் என்று சட்டசபையில் பதிவுத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படி, 323 கோடி ரூபாயில் 'ஸ்டார் 3.0' மென் பொருளை தயாரித்து, அடுத்த ஆண்டில் அமல்படுத்தும் பணிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக்குழு: இந்த திட்டத்தை கண்காணிக்க, தலைமை செயலர் தலைமையில் நில அளவிலான குழுவும், பதிவுத் துறை ஐ.ஜி., தலைமையில், திட்ட செயலாக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.. திட்ட ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்க, திட்ட ஆலோசகர்களை நியமிக்க, மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காண, பதிவுத் துறை ஐ.ஜி.,க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவையடுத்து, தனியார் நிறுவனங்கள் அமர்த்தப்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.. இது தொடர்பாக பதிவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் உள்ளதாவது:
ஸ்டார் 3.0: "தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 1975 முதல் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து, "ஸ்டார் 3.0" தொகுப்பில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்படி, மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும்.
ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருந்தால், அது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பியவை, சிதிலமடைந்த ஆவண தொகுதிகள், முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஆவண தொகுதிகள் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை, சார் பதிவாளர்கள் கடைபிடிக்கலாம்..
நம்பிக்கை இணையம்: பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய, திருத்தங்களை தவிர்க்க, "நம்பிக்கை இணையம்" என்ற புதிய முத்திரை பதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. அதனால், ஆவணங்களை மீண்டும் ஸ்கேன் செய்ய காரணமான குறைபாடுகள் பட்டியலிடப்பட்டு, சார் பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மறுமுறை ஸ்கேன் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications