டாப் ரேங்க்கில் இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தட்டித் தூக்கிய பாஜக.. யார் இந்த ராஜகோபால்?
சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் ராஜகோபால். பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநராக இருந்தபோது அவரது செயலாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றினார்.

பாஜகவின் தமிழக தலைமையகமான கமலாலயத்தில் சனிக்கிழமை அன்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் ராஜகோபால் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
"நாட்டின் நிர்வாகத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராஜகோபால், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பல துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றவர். ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், நுண்ணறிவுடன் முடிவெடுப்பவராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.
மோடி தலைமையில் நாடு காணும் புதிய வளர்ச்சிக்கு படித்தோர், அறிந்தோர், நேர்மையாளர், திறமைமிக்க இளைஞர்கள் அனைவரும் கட்சியில் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும், நம்முடன் அவரது பயணம் தொடர வாழ்த்துகிறேன். பாஜகவுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார்" என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், தமிழக ஆளுநரின் செயலாளர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் ராஜகோபால். கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் ராஜகோபால்.
பாஜகவில் ராஜகோபால் இணைந்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "நமது கட்சியில் இணைந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை செயலாளராக இருந்தவர். ஆளுநருக்கு செயலாளராக மற்றும் பல்வேறு துறைகளில் தன்னுடைய முத்திரையை பதித்தவர். அவர் தற்போது தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் 15 மருத்துவர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.
மக்கள் விரோத ஆட்சியாக இருக்கும் திமுக, வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்காக முழு மூச்சுடன் போராட பாஜகவினர் தயாராக உள்ளோம். திமுக ஆட்சி மீது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் அதிருப்தி உள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications