லண்டன்லாம் வேண்டாம்.. அப்பல்லோவில் இருக்கும் நவீன கருவிகள் அங்கு இல்லை.. பீலே சொன்னதாக சசிகலா தகவல்
சென்னை: அப்பல்லோவில் இருக்கும் நவீன கருவிகள் லண்டன் மருத்துவமனையில் கூட இல்லை என ரிச்சர்டு பீலே கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசனையின்படி அக்காவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லண்டனில் உள்ள கய்ஸ் அண்ட் செயனட் தாமஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலேயை அழைத்து அக்காவுக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது

ரிச்சர்டு பீலே
மருத்துவர் ரிச்சர்ட் பீலே தீவிர சிகிச்சை நோய் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர் என்னிடம் கூறினார்கள். எப்பாடுபட்டாவது அக்காவின் உடல்நலனை சரி செய்ய நான் அவரை சென்னைக்கு வரவழைக்க ஒப்புக் கொண்டேன். அதன்படி ரிச்சர்ட் பீலே சென்னைக்கு வந்தார். அக்கா குறித்து பீலே கூறுவதை தமிழில் டாக்டர் சிவக்குமாரும் தம்பிதுரையும், அப்பல்லோ மருத்துவர்களும் மொழிபெயர்த்து எனக்கு தெரிவிப்பார்கள்.

அப்பல்லோ மருத்துவமனை
அப்பல்லோ மருத்துவமனையில் அக்கா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பல சிறப்பு யாகங்கள், கூட்டு பிரார்த்தனைகள் என தொண்டர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவர் ரிச்சர்டு பீலே மீண்டும் சென்னை வந்தார். உடல் நலனை பரிசோதித்து விட்டு முதல்வரின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிநவீன கருவிகள்
அதிநவீன கருவிகளை கொண்டு அப்பல்லோ மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது. அதன் காரணமாக முதல்வர் விரைவாகவும் சீராகவும் உடல்நலன் முன்னேறி வருகிறார். அதனால் வெளிநாட்டு சிகிச்சை தற்போது தேவையில்லை. இங்கு முதல்வருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்குண்டான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் எங்கள் மருத்துவமனைகளில் கூட இல்லை என பீலே கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை
அதே போல எய்ம்ஸ் மருத்துவமனை குழுவினரும் அக்காவின் சிகிச்சை தொடர்பாக சென்னைக்கு அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையும் உரிய ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வந்தனர். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபி மருத்துவ குழுவினர் அப்பல்லோ மருத்துவமனையின் வேண்டுகோள்படி சென்னை வந்து தங்கி அக்காவுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அப்பல்லோவில் நவீன சிகிச்சைகள் இருக்கும் நிலையில் சென்னைக்கு டாக்டர் பீலேவின் மதுபானத்திற்கு மட்டும் 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications