3 வாலிபர்களின் வங்கி கணக்கில் திடீரென கிரெடிட் ஆன 2 கோடி..அதிரடி காட்டிய ED.. திருவள்ளூரில் பரபரப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் 3 வாலிபர்களின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.2 கோடி கிரெடிட் ஆகியுள்ளது. இது குறித்த தகவல் அமலாக்கத்துறைக்கு கிடைத்ததை அடுத்து டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர், 3 வாலிபர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்ட விரோத பணபரிமாற்றம் புகார்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது வழக்கம். அரசியல் பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள் என முறைகேடு புகார்களுக்கு உள்ளாகும் முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அவ்வப்போது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தும்.

ஆனால், இன்று டெல்லியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 3 வாலிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென இளைஞர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம் குமாரரஜூப் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வரும் தமிழரசன், பிரகாஷ், அரவிந்தன் ஆகிய இளைஞர்களின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.2 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அமலாக்கத்துறை தெரியவந்தது. இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 10-க்கும் மேற்பட்டோர் மூன்று இளைஞர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வங்கி கணக்கிற்கு ரூ.2 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வந்தது எப்படி? யார் அனுப்பியது என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ரூ.1.80 கோடி அளவுக்கு பணத்தை அந்த இளைஞர்கள் எடுத்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களின் வங்கி கணக்கிற்கு திடீரென இவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதேனும் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதா? ரூ.2 கோடி பணம் அனுப்பியது யார்? பணம் அனுப்பியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் மூன்று பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பணிக்கு சேர்ந்ததாகவும், அப்போது அவர்களின் சம்பள பணத்தை அனுப்புவதற்காக வங்கி கணக்கு விவரங்களை தனியார் நிறுவனம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, 3 பேரின் வங்கி கணக்கிலும் பல கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு பரிவர்த்தனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதனால், இளைஞர்கள் மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்குள் இது குறித்த தகவல் அமலாக்கத்துறை கிடைத்த நிலையில், அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications