வைத்திலிங்கத்திற்கு சிக்கல்.. ரூ.28 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும்.. சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அடுக்குமாடி கட்டிடத்துக்கு திட்ட அனுமதி வழங்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தின் போது வைத்திலிங்கம் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது அவர் மீது ரூ.28 லட்சம் கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்
கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம். அப்போது, சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்துக்கு திட்ட அனுமதி அளிப்பதற்காக ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
விசாரணை நடத்த உத்தரவு
அப்போது, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், எனவே வழக்கை முடித்து வைக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவை அடுத்து, வைத்திலிங்கம் மீதான விசாரணையை தீவிரப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். முன்னதாக கடந்த தேர்தலுக்கு முன், திமுகவில் இணைந்ததால் வைத்திலிங்கம் மீதான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையால் முடித்து வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.


Click it and Unblock the Notifications
