கல்வி உதவித் தொகையுடன் ரூ.400 விடுதிக் கட்டணம் - மாணவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் நியூஸ்
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், உணவு, உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியர்களுக்கு உணவு மற்றும் உறைவிட கட்டணத்தை எவ்வித பாகுபாடுமின்றி வழங்கும் பொருட்டு, கல்வி உதவித் தொகை திட்டத்திங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் உறைவிட கட்டணமாக, பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 175 ரூபாய், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 350 ரூபாய், ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 225 ரூபாய் என்று வழங்கப்படுவதை அனைவருக்கும் 400 ரூபாயாக உயர்த்தி 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், உணவு, உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 95 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை
இதே போல போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் மூலம் பராமரிப்புப் படியை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தகுதியிருந்தும் பயன் அடையாத தமிழக மாணவர்களுக்காகச் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, வீட்டிலிருந்து வரும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு, படிப்புகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் பராமரிப்பு படியை ரூ.2,500 முதல் ரூ.13,500 வரை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, சிறப்பு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, மாநில அரசின் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கும் தொகைக்கு இணையாக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப் படியை மத்திய அரசின் திட்ட தொகைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, வீட்டிலிருந்து பள்ளி வரும் மாணவர்களுக்குப் படிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.2,500 முதல் ரூ.7,000 வரையும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.13,500 வரையும் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ. 8.79 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications