விடிவு காலம்.. சென்னை மதுரவாயல் - துறைமுகம் மேம்பால திட்டத்திற்கு பட்ஜெட்டில் 5,770 கோடி ஒதுக்கீடு
சென்னை: அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் சென்னையின் கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து துறைமுகத்துக்கு செல்வதில் பல ஆண்டுகளாக சிரமம் இருந்து வந்தது.
இதனால் சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்துக்கு செல்லாமல் ஆந்திராவில் உள்ள துறைமுகங்களை நாட தொடங்கியதால் தமிழ்நாட்டிற்கான வருவாய் பாதிக்கப்பட்டது.

கருணாநிதி அரசின் திட்டம்
இதனை தவிர்க்க கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.

கிடப்பில் போட ஜெயலலிதா அரசு
இதனிடையே கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, எண்ணூர் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஸ்டாலின் ஆட்சியில் புத்துயிர் பெற்ற மேம்பால பணி
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து முதல்கட்ட தயாரிப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது. இதனிடையே நேற்று இந்த சாலை திட்டம் குறித்து சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவிக்கையில், "இந்த திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேட்டிலிருந்து துறைமுகம் வரை 2 அடுக்கு மேம்பாலமும், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை ஓரடுக்கு மேம்பாலமும் இருக்கும்" என்றார்.

30 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் மேம்பாலம்
மேம்பாலத்தின் குறுக்கே 13 இடங்களில் இறங்கும் பாலங்களும் அமைக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஐ.என்.எஸ். அடையார் பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்புகளை இந்த திட்டத்திற்காக அகற்ற இருப்பதாக கூறினார். இந்த மேம்பாலத்தின் சாலையில் பொதுமக்களின் வாகனங்களை அனுமதிப்பது குறித்தும் விரைவில் தீர்வு காணப்படும். கட்டுமானப்பணி தொடங்கிய 30 மாதங்களில் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்." என்றார்.

தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
20.5 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மேம்பால திட்ட பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதனிடையே இன்று தமிழ்நாடு பட்ஜெட்டில் உரையாற்றிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை மதுரவாயல் - துறைமுகம் இடையிலான மேம்பால திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications