1000 ரூபாய் வந்துடுச்சா? மகளிர் உரிமைத்தொகையில் புதுஸா கிளம்பிய சிக்கல்.. கோட்டைக்கு பறந்த கோரிக்கை
சென்னை: மகளிர் உரிமைத்தொகை குறித்த பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி தருகிறது என்றாலும், இந்த உரிமைத்தொகை குறித்த சில சந்தேகங்கள் இன்னும் தீராமலேயே உள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை முதல்வர் ஸ்டாலின், இறுதியில் நிறைவேற்றி விட்டார்.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை, கடந்த 15-ந் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

உரிமைத்தொகை: இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றொருபக்கம், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே, வெப்சைட் (https://kmut.tn.gov.in) ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை "மணியார்டர்" மூலமாக பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.. ஆனாலும் இந்த உரிமைத்தொகை குறித்த சில சிக்கல்கள் எழுந்தபடியே உள்ளன..
விண்ணப்பங்கள்: முதலாவதாக, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்களாம். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது..
இதையடுத்து, விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
தாலுகா அலுவலகங்கள்: எனினும், இப்படி ஒரு முகாம் நடத்தப்படுமா? என்பதில் சந்தேகம் கிளம்பி உள்ளது.. காரணம், "இ-சேவை மையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் முதல்வரின் உதவி மையங்களில் எளிதாக மேல்முறையீடு செய்யலாம் என்பதால் இதற்காகத் தனியாக சிறப்பு முகாம்கள் எதுவும் தேவையில்லை என்றும் கூறப்படுகிறதாம். எனவே, முகாம் குறித்த குழப்பமும் நீடிக்கிறது.
மாற்றுத் திறனாளிகள்: அடுத்ததாக, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இங்கு விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்.. அதற்கான காரணத்தை இணையதளத்தில் பார்த்தபோது, தங்களுக்கு 4 சக்கர வாகனம் உள்ளதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தின் இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் இணைக்கபட்டுள்ளன. ஆனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.
அடுத்த கோரிக்கை: எனவே, இதுகுறித்தும் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள் மாற்றுத்திறனாளிகள். அதேபோல, விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தி தந்தால், உதவியாக இருக்கும்என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...












Click it and Unblock the Notifications