பிராமணர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பிய அண்ணாமலை.. நம்ப மறுக்கும் எஸ்.வி.சேகர்.. நறுக் ட்வீட்!
சென்னை: நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கப்பட்ட ஓட்டு வங்கி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோவை வெளியிட்டு நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த விழாவில் 21 ஆதீனங்கள் தனி விமானம் மூலம் சென்று கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் சிறப்பு பூஜைகளை செய்து மாதிரி செங்கோலை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர்.

இந்த விழாவுக்கு வந்த மதுரை ஆதீனம், இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒரு செயலை பிரதமர் மோடி செய்திருக்கிறார். முதல் முறையாக எங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்திருக்கிறார் என பாராட்டியிருந்தார். பிரதமர் மோடியை பெருமைப்படுத்த முன்னாள் பிரதமர் நேருவை சிறுமைப்படுத்துவதா என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்கள்.இது ஒரு சரித்திர நிகழ்வு. நாசிக்கள் எந்த அளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பை கடைப்பிடித்து வருகிறது.
இதை நான் ஏஎன்ஐ செய்கி நிறுவன பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன். இதை சொல்ல எனக்கு எந்த வித அச்சமும் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள். எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் நல்லவர்களாக உள்ளனர். பிராமணர்களை வைத்து தமிழகத்தில் ஒரு பெரிய அரசியலே நடக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இதை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக கண்டித்தார். அவர் நம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலைக்கு தமிழக அரசியலின் அடிப்படையே தெரியவில்லை.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிராமணர் என்று அண்ணாமலைக்கு தெரியுமா. திமுக எப்போதும் பிராமணர்களுக்கு எதிரி கிடையாது, பிராமணியத்துக்குத்தான் எதிரி. நாங்கள் பிராமணியத்தை எதிர்த்ததால்தான் அண்ணாமலை போன்றோர் ஐபிஎஸ் ஆக முடிந்தது என காட்டமாக தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வரும் நிலையில் பாஜக மூத்த நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் அண்ணாமலை பேசிய வீடியோவை வெளியிட்டு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கப்பட்ட ஓட்டு வங்கி என குறிப்பிட்டுள்ளார்.
நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கைப்பட்ட ஓட்டு வங்கி. https://t.co/lYWaB7Iwwr
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) May 31, 2023
அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு அளித்த பேட்டியில் பாஜகவில் உள்ள பிராமணர்களின் வளர்ச்சியை தடுக்கவே அண்ணாமலை வந்துள்ளார். அண்ணாமலைக்கு பிராமணர்களை பிடிக்கவில்லை. பிராமணர்கள் 3 சதவீதம் பேர் இருந்தாலும் அவர்களை ஏன் கட்சியில் வளரவிடணும் என நினைப்பதாகவும் அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருப்பதாகவும் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு எஸ்.வி. சேகர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications